தனியார் டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை கர்நாடக அரசு சரியான முறையில் கையாளவில்லை
தனியார் டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை கர்நாடக அரசு சரியான முறையில் கையாளவில்லை என்று சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
பெலகாவி,
கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து பேசும்போது, “கர்நாடகத்தில் தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் பலர் உயிரிழந்து வருகிறார்கள். அந்த டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண மாநில அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மாலை சித்தராமையா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவு என்ன? என்பதை இந்த சபைக்கு தெரிவிக்க வேண்டும்“ என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதாவை சேர்ந்த உறுப்பினர் சி.டி.ரவி, “கர்நாடகத்தில் தனியார் டாக்டர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், உரிய சிகிச்சை கிடைக்காமல் 40–க்கும் அதிகமானவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் சாக வேண்டும்?“ என்றார்.அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா உறுப்பினர் விசுவேஸ்வர ஹெக்டே காகேரி, இந்த அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது என்று கிண்டலாக கூறினார்.
இதையடுத்து மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், “பா.ஜனதாவினருக்கு ஏழைகள் நலனில் அக்கறை இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்“ என்றார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், “அரசு பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாக கூறினால் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஏன் கோபம் வருகிறது?“ என்றார். மேலும் பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து, நின்று தனியார் டாக்டர்கள் போராட்டத்தை அரசு சரியான முறையில் கையாளவில்லை. அதனால் இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.
உறுப்பினர் ஜீவராஜ் பேசும்போது, “அரசு வாழ வேண்டும் என்பதற்காக மக்கள் சாக வேண்டுமா?. ஏழை மக்களின் உயிர்களுக்கு மதிப்பு இல்லையா?“ என்றார். அப்போது மந்திரி ஜெயச்சந்திரா பேசுகையில், “தனியார் டாக்டர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கர்நாடகத்தில் இன்று (நேற்று) பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்கியுள்ளது. தனியார் டாக்டர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்–மந்திரி இன்று (நேற்று) மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பெங்களூருவில் இருந்து நிர்வாகிகள் வர வேண்டும் என்பதற்காக மதியம் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது“ என்றார்.அப்போது பேசிய பா.ஜனதா உறுப்பினர்கள், “தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு ஐகோர்ட்டு உத்தரவின்படி செயல்பட தொடங்கியுள்ளது. இதில் அரசின் பங்கு எதுவும் இல்லை. இந்த பிரச்சினையை தீர்க்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?“ என்றனர். அதைத்தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா, “நாங்கள் ஒன்றும் கழுதை மேய்க்க இங்கே வரவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் சொல்கிறபடி எல்லாம் செய்ய முடியாது“ என்றார்.
மீண்டும் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், “தனியார் மருத்துவமனைகள் மசோதாவை இங்கே தாக்கல் செய்து அனுமதி பெறாவிட்டால் ஆகாயம் மூழ்கிவிடாது. அரசு இதை கவுரவ பிரச்சினையாக பார்க்கக்கூடாது. மந்திரி ரமேஷ்குமார், இந்த மசோதாவை தாக்கல் செய்து, ஒப்புதல் பெற்றே தீர வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளார். சித்தராமையா குழப்பமான கருத்துகளை தெரிவிக்கிறார். மக்களுக்கு ஒரு தெளிவான பதில் கிடைக்கவில்லை. எனவே போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும். காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவுக்காக அரசு காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையென்றால் அதை இந்த சபையில் தெரிவிக்க வேண்டும்“ என்றார்.இதற்கு பதிலளித்த மந்திரி ஜெயச்சந்திரா, இன்று(நேற்று) நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார்.