மலைப்பூட்டும் மணிப்பூர்!


மலைப்பூட்டும் மணிப்பூர்!
x
தினத்தந்தி 18 Nov 2017 7:15 AM GMT (Updated: 18 Nov 2017 7:15 AM GMT)

சின்னஞ்சிறு மாநிலமான மணிப்பூர், இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கிக்கொடுக்கும் உற்பத்திக் கூடமாகத் திகழ்கிறது.

சில புள்ளிவிவரங்கள் சொன்னால் மலைப்பாக இருக்கும். மணிப்பூரின் மொத்த மக்கள்தொகை 28 லட்சம்தான். ஆனால் இந்த மாநிலத்தில் இருந்து அர்ஜுனா விருது பெற்றவர்கள் 18 பேர், இந்தியாவின் 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் சீனியர் மகளிர் கால்பந்து அணிகளில் 38 முதல் 50 சதவீதம் பேர் மணிப்பூர்வாசிகள்.

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆடிய இந்திய அணியில் 8 பேர் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள். மேலும், இந்திய சீனியர் கால்பந்து அணியில் 3 பேர், மகளிர் கால்பந்து அணியில் 7 பேர் என்று மணிப்பூரின் தடம் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

விளையாட்டுக் கலாசாரம்

விளையாட்டு என்பது மணிப்பூர் மக்களின் கலாசாரமாகவே ஆகி யிருப்பதுதான் அவர்கள் விளையாட்டில் சாதிப்பதற்குக் காரணம். வீட்டிலும் சரி, கடைத்தெருக்களிலும் சரி, பெண்கள் குடும்ப விஷயம் போல விளையாட்டைப் பற்றி விவாதிப்பது சர்வ சாதாரணம்.

உதாரணத்துக்கு, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள, முழுக்க முழுக்கப் பெண்களால் நடத்தப்படும் சந்தையான இமா கீட்டெலில் கால்பந்து பற்றி தீவிரமாக விவாதிக்கப்படுவது காதில் விழுகிறது.

அது, ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா, கானாவிடம் 4-0 என்ற கோல்கணக்கில் தோற்று தொடரைவிட்டே வெளியேறிய மறுநாள்.

“நம்ம பசங்க இன்னும் நன்றாகத் தயாராகியிருக்க வேண்டும். அவங் களுக்கு நிறைய நேரம் இருந்தது...”

“எங்கே... இப்போதெல்லாம் அவங்க டி.வி.தானே பாக்குறாங்க...”

“ஜாக்சன் அந்த கோலடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டிருக்கக் கூடாது...” என்று பெண்கள் விறுவிறுப்பாக வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டே, விளையாட்டு அலசலையும் நிகழ்த்துகிறார்கள்.

சேலை, சால்வை, போர்வை போன்றவற்றை விற்பனை செய்யும் 52 வயது குருமயும் சாயாதேவி, “உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நாங்கள் ஒன்றுவிடாமல் பார்த்தோம். நம்ம பையன்களுக்கு எங்களின் ஆசீர்வாதம் உண்டு. எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த கால்பந்து வீரர் களாக உருவாவார்கள்” என்கிறார்.

எல்லாவற்றிலும்...

கால்பந்து என்றில்லை, குத்துச்சண்டை, ஆக்கி, பளுதூக்குதல், பாரம்பரிய தற்காப்புக் கலைகள் என்று எல்லா விளையாட்டுகளிலும் மணிப்பூர் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் தங்களுக்குப் பிடித்த உள்ளூர் ‘ஹீரோ’வை கூறுகிறார்கள். வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற விளையாட்டாக இருக்கும் ‘போலோ’ தோன்றிய பூமி மணிப்பூர்தான்.

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும், விளையாட்டு அமைப்புகளுக்கும் மணிப்பூர் மக்கள் தங்கள் ஏகோபித்த ஆதரவை அளிக் கிறார்கள். மக்களின் ஆதரவுடனே இந்த மாநிலம் எங்கும் சுமார் ஆயிரம் விளையாட்டு கிளப்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன.

“நான் இந்தியா முழுக்கப் பயணம் செய்திருக்கிறேன். எங்கள் மக்களைப் போல எந்தப் பகுதி மக்களும் விளையாட்டுக்கு ஆதரவு வழங்குவதைப் பார்த்ததில்லை” என்கிறார், நவோபா தாங்ஜாம்.

வடகிழக்கு மறுஒருங்கிணைப்பு கலாசார கழகம் (சுருக்கமாக ‘நெரோக்கா’) என்ற கால்பந்து கிளப்பின் தலைமைச் செயல் அலுவலர் இவர்.

மக்களின் உறுதுணை

மலைகள் நிரம்பிய பிரதேசம், தீவிர வாதப் பிரச்சினை, அவர்களுடன் மோதும் ராணுவம் என்ற மணிப்பூரில் விளையாடுவதற்கு ஏற்ற சூழல் சிறிதும் இல்லை.

ஆனால் மக்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் தளர்வில்லாத ஊக்கம் மட்டுமே இங்கு விளையாட்டுத் துறையை முன்னகர்த்தி வருகிறது.

விளையாட்டுக்கு உதவுவது போன்ற தாமாக முன்வந்து செயல்படுவது, மணிப்பூரின் ‘லாலப்’ என்ற கலாசாரத்தில் இருந்து பிறந்தது. ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தையது இக்கலாசாரம். அதாவது, 17 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், வருடத்தில் சில நாட்கள் தாங்களாக முன்வந்து பொதுச் சேவையாற்றுவது.

“எங்களின் லாலப் கலாசாரம் ஆங்கிலேய ஆட்சியின்போது மங்கிவிட்டது. அது தற்போது மீண்டும் உயிர்பெற்றது போல இருக்கிறது. அதனால்தான் எங்கள் மாநிலத்தில் உள்ளூர் அளவிலேயே விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, வளர்க்கப்படுகின்றன” என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மணிப்பூர் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை முன்னாள் ஆணையருமான ஆர்.கே. நிமாய் சிங் கூறுகிறார்.

இம்மாநிலத்தின் ஒவ்வொரு சின்ன ஊரிலும் விளையாட்டு கிளப்கள் தொடங்கப்படுகின்றன, தொடர்ந்து நடத்தப்படுகின்றன, வளர்க்கப்படுகின்றன- இவையெல்லாம் அரசாங்கத்தின் கையை எதிர்பார்க்காமல், முழுக்க முழுக்க உள்ளூர் மக்களின் உதவியுடனே.

வளர்ந்தவர்களும்... வளர்பவர்களும்

இங்கு ஓர் இனிமையான சுழற்சி நிலவுகிறது. மக்கள் உதவியுடன் வளரும் வீரர், வீராங்கனைகள், தேசிய, சர்வதேச அளவில் ஆடும் அளவுக்கு உயர்கிறார்கள், அப்படி ஒரு நல்ல நிலையை எட்டியதும் தங்கள் ஊரின் வளர்ந்துவரும் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உதவுகிறார்கள்.

விறுவிறுப்பான விளையாட்டுக் களத்தில் இருந்து விடைபெற்ற முன்னாள் வீரர், வீராங்கனைகளும் இளைய தலைமுறைக்குப் பயிற்சியளிக்கிறார்கள், வழிகாட்டுகிறார்கள்.

இந்தச் சிறிய மாநிலத்தில் பெரிய நிறுவனங்கள் அதிகளவில் இல்லை. ஆனால் இருக்கும் சின்னச்சின்ன நிறுவனங்களும் தங்களால் முடிந்த நிதியுதவியை விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அளிக்கின்றன. தம்மால் முடிந்த அளவில், உணவுக்கான உதவியையாவது வழங்குவது பலரின் வழக்கம்.

“தேசிய அளவில் விளையாடப் போன பலரும், உள்ளூர் கிளப்களில் முளைவிட்டு வளர்ந்தவர்கள்தான். இது மணிப்பூருக்கே உள்ள தனிச்சிறப்பு. விளையாட்டு கலாசாரம் நிறைந்த மேற்கு வங்காளம், கோவா போன்ற ஒரு சில மாநிலங்களைத் தவிர வேறெங்கும் கிளப்புகளில் இந்த அளவு பொதுமக்களின் பங்கேற்பு இல்லை” என்று நிர்மாய் சிங் கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக, இம்பாலில் உள்ள சமூக மறுமலர்ச்சியாளர்கள் கழகம் என்ற விளையாட்டு கிளப், வீடு வீடாக ஏறிச் சேகரிக்கப்படும் தொகை, தாமாக முன்வந்து வழங்கப்படும் நன்கொடைகளைக் கொண்டே 45 ஆண்டுகாலமாக நடத்தப்பட்டு வருகிறது.

கிளப் என்றால், பெரிய கட்டிடங்கள், நவீன வசதிகளை எதிர்பார்க்க முடியாது. ஒரு சிறிய அறை, கால்பந்து, ஆக்கி, துப்பாக்கி சுடுதல், வில்வித்தை ஆகியவற்றுக்குப் பயன்படும் ஒரு பொது மைதானம், அவ்வளவுதான்.

ஆனால் விளையாட்டு ஊக்கம் என்பது ஜொலிஜொலிக்கும் நவீன கட்டிடங்கள், வசதிகளில் இல்லை, தீவிரம், கைதூக்கிவிடும் மனோபாவத்தில் இருக்கிறது என்பதற்கு இந்த கிளப் உதாரணம்.

‘கைகொடுத்தோம்... வென்று வந்தார்...’

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒரு டேக்வாண்டோ வீரர் மும்பையில் நடைபெற்ற தேசியப் போட்டிக்குத் தேர்வானார். ஆனால் அங்கு செல்வதற்கான வசதி அவருக்கு இல்லை. அதுபற்றித் தகவல் அறிந்ததும், அந்தப் பையனுக்குத் தேவையான பணத்தை எப்படித் திரட்டிக்கொடுப்பது என்று நாங்கள் கூட்டம் போட்டு ஆலோசித்தோம். அப்போது சிலர் நிதியுதவி செய்ய முன்வர, அதன்விளைவாக அந்த வீரர் மும்பை சென்றார், வெண்கலப் பதக்கமும் வென்று வந்தார்” என்கிறார், இந்த கிளப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான சிங்லென்பா ரான்.

அவர் சொல்லும் இன்னொரு செய்தியும் சந்தோஷம் அளிக்கிறது...

“எங்கள் கிளப்பைச் சேர்ந்த கால்பந்து வீரரான தர்மச்சந்திரா, தற்போது மும்பை எப்.சி. அணிக்காக ஆடுகிறார். அவர் இங்கே சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம், இளம் வீரர், வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.”

இந்த தொலைதூர மாநிலத்தில் இளைஞர், இளைஞிகள் மத்தியில் விளையாட்டு ஆர்வம் வளர்வதற்கு, இங்கு மால்கள், மல்டிபிளெக்ஸ்கள் என்று பொழுதைப் பறிக்கும் விஷயங்கள் குறைவு என்பதும் ஒரு காரணம்.

‘இந்திய கால்பந்தின் துர்கா’

மணிப்பூர் விளையாட்டு நட்சத்திரங்களில், ‘இந்திய கால்பந்தின் துர்கா’ என்று வர்ணிக்கப்படும் ஓய்னம் பெம்பெம் தேவியும் ஒருவர். சிறுவர்களுடன் இணைந்து 8 வயதில் கால்பந்து விளையாடத் தொடங்கியவர் இவர்.

“நான் கால்பந்தில் வளர்ந்ததற்கு, ஆண்- பெண் பாகுபாடு பார்க்காத எங்கள் சமூகச் சூழல் ஒரு முக்கியக் காரணம்” என்கிறார் பெம்பெம் தேவி.

தகுந்த ஸ்பான்சர்ஷிப் கிடைப்பதுதான் மணிப்பூர் விளையாட்டு ஆர்வலர்களுக்கு இன்றும் ஒரு பெரிய சிரமமான விஷயமாக இருக்கிறது. அந்தக் கருத்தையே பிரதிபலிக்கிறார், ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் மேரி கோம், சரிதா தேவி, தேவேந்திரோ, டிங்கோ சிங் போன்றோரை உருவாக்கிய இபோம்சா சிங்.

ஆனால் எல்லா தடைகளையும் தாண்டி மணிப்பூர் விளையாட்டுத் துறை வெற்றிநடை போடுகிறது, போடும்.

காரணம், இங்கு விளையாட்டு என்பது வெறும் விளையாட்டல்ல, அது ஒரு மதம்! 

Next Story