எண்ணற்ற உயிர்களைக் காக்கும் சிறிய ‘சூட்கேஸ்’ சாதனம்!
நேபாள நாட்டில் ஒரு சிறிய சூட்கேஸ் சாதனம், எண்ணற்ற இளந்தாய் களையும் சேய்களையும் காப்பாற்றி வருகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நேபாளத்தில், தொலைதூரப் பகுதிகளில் உள்ள பிரசவ மையங்களில் மின்சாரப் பிரச்சினை போன்றவை இருக்கின்றன.
ஆனால் ஒரு மஞ்சள் நிற சூட்கேஸ் மூலம் அந்த மையங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மின்சாரமும், ஒளியும் வழங்கப்படுகிறது.
இந்த சூட்கேசில் உள்ள மின் அமைப்பு சாதனம், பிரசவ மையங்களின் கூரையில் உள்ள சூரிய சக்தித் தகட்டுடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. அதன்மூலம் மின்சாரத்தைப் பெற்று, வெளிச்சத்தையும் வெப்பத்தையும் வழங்குகிறது. பேட்டரி சார்ஜர், பேபி மானிட்டர் ஆகியவற்றையும் இது கொண்டிருக்கிறது.
நேபாளம் பாண்டவ்கனியின் உள்ளூர் செவிலியர் ஹிமாஷிரிஷைப் பொறுத்தவரை இந்த சோலார் சூட்கேஸ் ஓர் உயிர் பாதுகாப்பு சாதனம். அவர் தனது சுகாதார மையத்தின் மின்சாரப் பிரச்சினைகளுக்கு இதன் மூலமே தீர்வு கண்டிருக்கிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு இந்த சோலார் சூட்கேஸை நிறுவுவதற்கு ஒன்ஹார்ட் வேல்டுவைடு என்ற அறக்கட்டளை உதவியது. அதன்பிறகு இங்கு நடந்த பிரசவங்களில் தாய், சேய் இறப்பே நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“பிரசவத்துக்காக இந்த சுகாதார மையத்துக்கு வரும் கர்ப்பிணித் தாய்மார்கள் இங்கு நிலவும் இருட்டைக் கண்டு பயப்படுவார்கள். ஆனால் தற்போது பிரசவத்தின்போது சோலார் வெளிச்சம் பயன்படுத்தப்படுவதால் அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். தமது குழந்தையை இழந்துவிடுவோமோ என்ற பயம் இப்போது அவர்களுக்கு இல்லை” என்கிறார் ஹிமா.
அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்த வீ கேர் சோலார் நிறுவனத்தின் தாய்மை மற்றும் மகப்பேறியல் மருத்துவர் லாரா ஸ்டாசெல்லின் சிந்தனையில் உதித்த யோசனைதான் இந்த சோலார் சூட்கேஸ்.
2008-ம் ஆண்டு நைஜீரியாவில் மின்சாரம் இல்லாமல் நடந்த பிரசவங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதோடு, உயிரி ழப்புகளும் நேரிட்டதை அவர் கண்டார்.
டாக்டர் ஸ்டாசெல் தனது கணவரும், சூரியசக்தித் துறை பொறியாளருமான ஹால் அரோன்சன்னுடன் இணைந்து சூட்கேஸ் அளவிலான, கிரிட் இணைப்பில்லாத சோலார் மின் அமைப்பை உருவாக்கினார்.
இந்த அமைப்பு நைஜீரியாவில் வெற்றிபெற்றது. எனவே, பிரசவ காலத்தில் தாய், சேய் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள பிற நாடுகளின் மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களுக்கும் இந்தக் கண்டுபிடிப்பைக் கொண்டுவர அவர்கள் முடிவு செய்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் பல மருத்துவமனைகள் இடிந்தன. எஞ்சிய மருத்துவமனைகளிலும் நிலையான மின்சார வசதி இல்லாமல் போனது.
இப்படிப்பட்ட சூழலில்தான் அந்நாட்டில் சூரியசக்தி சூட்கேஸ்கள் கை கொடுக்கின்றன. 16 கிலோ எடையுள்ள இந்த சூட்கேஸ்கள் கடுமையான நிலப்பரப்புகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றவை.
அதனால்தான், நிலநடுக்கத்துக்குப் பின் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவ மற்றும் பிரசவக் கூடாரங்களுக்குத் தேவையான மின்சாரத்தை இதன் மூலம் உடனடியாக வழங்க முடிந்தது.
ஆனால், இயற்கைப் பேரழிவுகள் இல்லாத காலத்திலும் மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை முழுமையாக உற்பத்தி செய்யமுடியாத நிலையில் நேபாளம் இருக்கிறது. அங்கு கிராமப்புறங்களில் உள்ள பல மகப்பேறு மையங்கள் அல்லது சிறு மருத் துவமனைகளில் மின்சாரமே இல்லை.
சோலார் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் தாபாவின் கருத்துப்படி, நேபாளத்தில் 33 சதவீத கிராமப்புற பகுதிகளில் நம்பகமான மின்சாரம் இல்லை.
சூரிய ஒளி, காற்று அல்லது நீரைப் பயன்படுத்தி சிறு அளவிலான மின்னுற்பத்தியை அதிகரிப்பதற்கான அரசு திட்டங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. ஏனெனில் தனியார் நிறுவனங்கள் தொலைதூரப் பகுதிகளில் இதற்கான அமைப்புகளை நிறுவுவதும் பராமரிப்பதும் கடினமாக இருப்பதால் அவர்களால் லாபம் ஈட்ட முடிவதில்லை.
எனவே, இதுபோன்ற அமைப்பின் செயல்பாட்டில் பயனாளர் களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்வரை, சூரிய எரிசக்தித்துறையில் செய்யவேண்டிய பணிகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக அவை, சேவை அடிப்படையில் வழங்கப்படவேண்டும் என்று கோரப்படுகிறது.
2013-ம் ஆண்டு பாண்டவ்கனியில் பிரசவ மையம் கட்டப்படுவதற்கு முன்னர், பெரும்பாலான குழந்தைகள் வீட்டிலேயே பிறந்தனர். சில நேரங்களில் இருளிலோ அல்லது டார்ச் லைட் வெளிச்சத்திலோ பிறந்தன.
இப்பகுதி மக்கள், சிக்கலான நேரங்களில் மலைப்பாங்கான மண் மற்றும் பாறைகள் கொண்ட 65 கிலோமீட்டர் பாதையை கடந்து, பாக்லங் என்ற நகருக்குச் செல்ல வேண்டும்.
“பிரசவத்தின்போது சில குழந்தைகளின் நிலை மாறியிருக்கும், அவர் களுக்கு உதவிசெய்யத் தேவையான உபகரணங்கள் எங்களிடம் இல்லை. அதிக ரத்தப்போக்கினால் கர்ப்பிணிகள் இறப்பது வழக்கமான விஷயமாக இருந்தது” என்கிறார் ஹிமா.
உலகின் தொலைதூரப் பகுதியில் உள்ள இந்த இடத்தில், இப்போது ஹிமாவும் அவரது ஊழியர்களும் தங்கள் செல்போன்களை சோலார் சூட்கேஸின் மற்றொரு முக்கிய பகுதியைக் கொண்டு சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
“சிலசமயங்களில் 15 நாட்கள்கூட மின்சாரம் இல்லாத நிலை நீடிக்கும். எங்களுடைய செல்போன்களை சார்ஜ் போடமுடியாததால், தொடர்பில் இருந்து நாங்கள் முழுமையாக துண்டிக்கப்படுவோம்” என்று ஹிமா விளக்குகிறார்.
இந்த பிரசவ மையத்தில் பிரசவித்த 175 பேரில், சுனார் என்ற பெண்மணியும் ஒருவர். இவர் தனது இரண்டாவது குழந்தையை இங்கு பெற்றெடுத்தபோது, முதல் மகள் பிறந்தபோது நேர்ந்த அனுபவமே ஏற்படும் என நினைத்தார். ஆம், இவரது முதல் குழந்தையின் பிரசவத்துக்கு வந்தபோது அங்கு மின்சாரம் போய்விட்டது. இனி அந்தக் கவலையில்லை.
சோலார் சூட்கேஸ் மூலம், இவரைப் போன்ற கர்ப்பிணிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்!
Related Tags :
Next Story