எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம், அடிபணிய மாட்டோம்; ஓ.பன்னீர்செல்வம்
எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம், அடிபணிய மாட்டோம் என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா 23 மாவட்டங்களில் நடந்து முடிந்துவிட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார். அவரது ஆசையின்படி தற்போது இந்த விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் முக்கிய நோக்கம் எம்.ஜி.ஆரின் சிறப்பு, தியாகம், கொள்கை, புகழ் ஆகியவற்றை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே ஆகும். வெள்ளையர்களை எதிர்த்து போராடிய ராணி வேலுநாச்சியார், மருதுபாண்டியர், குயிலி உள்ளிட்டோர் வாழ்ந்த சிவகங்கை சீமையில் இந்த விழா நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி. இந்த விழா நடைபெறும் மன்னர் துரைசிங்கம் அரசுக்கல்லூரியில் தான் நானும் படித்தேன். நான் படித்த கல்லூரியிலேயே நடைபெறும் அரசு விழாவில் முன்னிலை வகிப்பது மனதிற்கு சந்தோஷத்தை தருகிறது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இதனை மலைத்துப்போய் பார்க்கிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்தது போல் தமிழகத்தையும் எதிர்க்கட்சிகள் தாரை வார்த்திருப்பார்கள். இதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர் ஜெயலலிதா. தமிழகம் செழித்திட ஜெயலலிதா என்ற அன்பு மழையை அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். தனக்காக சொத்து சேர்க்காமல் மக்களின் அன்பை மட்டுமே சேர்த்தவர் எம்.ஜி.ஆர். ஆட்சியாளர்களை மட்டுமின்றி அனைத்து மக்களையும் குடும்பத்தினர் போல் பார்த்தவர். தமிழக மக்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கியவர். அவரது விருப்பப்படியே ஜெயலலிதா ஆட்சியை நடத்தினார்.
ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் மத சண்டை, சாதி கலவரம் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஆட்சியே நடைபெற்றது. தமிழக மக்களின் மனதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலை சின்னத்தை முடக்க பல்வேறு சதி வேலைகள் நடந்தன. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. புலிவேஷம் போட்டுக்கொண்டு சிலர் நாங்கள் தான் தலைவர்கள் என்று கூறி வருகிறார்கள். மக்கள் இதனை ஒருபோதும் நம்பி ஏமாற மாட்டார்கள். நாங்களும் எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம், அடிபணிய மாட்டோம். துரோகிகளின் எண்ணம் மக்களிடம் செல்லுபடி ஆகாது. யாராலும் அ.தி.மு.க. என்ற மக்கள் இயக்கத்தை அசைக்கவோ, அழிக்கவோ முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.