வசதி இல்லாதவர்களும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி பயன்பெறலாம் நீதிபதி நசீர்அகமது பேச்சு
வசதி இல்லாதவர்களும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி பயன்பெறலாம் என்று சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதி நசீர் அகமது கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் அனைவருக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 118 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று திருப்பூரில் நடந்தது. திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் இருந்து தொடக்கிய இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதி நசீர் அகமது தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். ஊர்வலம் குமரன் ரோடு, கோர்ட்டு ரோடு வழியாக வாலிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து அந்த மண்டபத்தில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதி நசீர் அகமது தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகுழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன், செயலாளர் நீதிபதி முரளீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நசீர் அகமது பேசும்போது கூறியதாவது:–
நமது நாட்டில் உள்ள மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் சாதாரண மக்களுக்கும் நீதி மறுக்கப்படக்கூடாது. இதனாலேயே வசதி வாய்ப்பு இல்லாதவர்களும் நீதி பெறும் வகையில் இந்த சட்டப்பணிகள் ஆணைக்குழு தொடங்கப்பட்டுள்ளது. சட்டப்பணிகளின் செயல்பாடுகள் மேலும் விரிவடைய வேண்டும். வீடுகளை தேடி நீதி செல்லும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
சேவை செய்ய வேண்டும் என்ற மனபான்மையுடன் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். சட்ட பணிகள் தேவைப்படும் பொதுமக்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் வக்கீல்கள் ஒரு பாலமாக இருக்க வேண்டும். வசதிவாய்ப்புகள் இல்லாதவர்கள் கூட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி தீர்வு காணலாம். இது குறித்த முழு தகவல்களையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.