தமிழகத்தில் தற்போது கவர்னர் ஆட்சிதான் நடக்கிறது டி.ராஜா எம்.பி. பேட்டி


தமிழகத்தில் தற்போது கவர்னர் ஆட்சிதான் நடக்கிறது டி.ராஜா எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2017 10:30 PM GMT (Updated: 18 Nov 2017 7:53 PM GMT)

குஜராத் தேர்தல் பா.ஜனதாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. திருப்பூரில் கூறினார்.

திருப்பூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. கலந்துகொண்டார்.

பின்னர் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

தமிழக கவர்னர் தனது விருப்பப்படி மாநில நிர்வாகத்தில் தலையிடுவது, அவராக செயல்படுவது மாநில உரிமைகளை மீறுவதாகும். அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறுவதாகும். எங்கள் கட்சியின் சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம். அ.தி.மு.க. அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாக உள்ளது. மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கும் அரசாக, மாநில நலன் காக்க இயலாத அரசாக உள்ளது.

எனவே அ.தி.மு.க. அரசு அதிகாரத்திலும், ஆட்சி பொறுப்பில் நீடிப்பதற்கும் தார்மீக நெறிகளை இழந்துவிட்டது. அரசியல் உரிமைகளை இழந்துவிட்டது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். கோட்டையில் இருந்து இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி கருதுகிறது. இந்த முழக்கத்தை முன்வைத்து எங்கள் கட்சியின் மாநிலக்குழு அரசியல் இயக்கத்தை நடத்த முன்வைத்துள்ளது.

இந்திய அளவில் மோடி அரசு பல்வேறு நிலைகளில் தோல்வி அடைந்து வருகிறது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, அமெரிக்க நிறுவனமான ‘மூடிஸ்’ நிறுவனத்தின் மதிப்பீட்டை முன்வைத்து, அவர்கள் கருத்து கணிப்பை முன்வைத்து மோடி பிரபலமான தலைவர், மோடி அரசின் கொள்கைக்கு உலகம் முழுவதும் பாராட்டு கிடைக்கிறது என்று சொல்வது வாய்ச்சவுடலாக உள்ளதே தவிர யதார்த்த நிலைமைக்கு பொருத்தமானதாக இல்லை. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது.

உயர்பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு சிறு, குறு தொழில்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை திருப்பூர் மக்கள் நன்கு அறிவார்கள். வேலையிழப்புகள் அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் மோடி அரசு படுதோல்வி அடைந்துள்ளது. கருப்பு பணம் கையகப்படுத்தப்படும் என்ற மோடியின் வாக்குறுதி காற்றில் போய்விட்டது.

மோடி அரசின் கொள்கைகள் மக்கள் விரோத கொள்கைகளாக உள்ளன. மோடி அரசின் கொள்கைக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்று அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் முடிவு எடுத்துள்ளோம். குஜராத் தேர்தல் பா.ஜனதாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மோடி முதல் அமித்ஷா வரை பா.ஜனதா தலைவர்கள் குஜராத்துக்கு படையெடுத்து வருகிறார்கள். குஜராத்தில் அவர்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் மற்ற கட்சிகளுக்கு எதிராக கேவலமான முறையில் பிரசாரத்தை பா.ஜனதா கட்சி கட்டவிழ்த்து விட்டு இருக்கிறது. இதை மக்களும் அறிந்து வருகிறார்கள்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தள்ளிப்போய் வருகிறது. அதற்கு காரணம் குஜராத் தேர்தல். தேர்தல் முடிந்த பின்பும் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பாராளுமன்றம் செயல்படுகிற நாட்கள் இப்படி குறைக்கப்பட்டு வருவது பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. பாராளுமன்றம் செயல்பட்டால்தான் ஆட்சி சீராக அமையும்.

அதிகாரப்பூர்வமாக கவர்னர் ஆட்சி அறிவிக்கிறாரோ இல்லையோ தமிழகத்தில் நடைபெறுவது தற்போது கவர்னர் ஆட்சி தான். மத்தியில் உள்ள பா.ஜனதா கட்சி ஆட்டுவிக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் உள்ளது. சட்டத்துக்கு புறம்பாக சட்டத்தை மீறி சொத்துகள் யார் சேர்த்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை எங்கள் கட்சி தவறு என்று கருதவில்லை. கடந்த காலத்தில் சேகர் ரெட்டி, ராமமோகன்ராவ் வீடுகளில் சோதனை நடந்தன. ஆனால் மேல்நடவடிக்கை என்ன என்பது தமிழக மக்களுக்கு தெரியவில்லை. சொத்து குவிப்பு, வருமான வரி ஏய்ப்பு என்று வரும்போது அனைவரிடமும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story