கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம் 3 அமைச்சர்கள் பங்கேற்பு


கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம் 3 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 18 Nov 2017 11:00 PM GMT (Updated: 18 Nov 2017 9:15 PM GMT)

மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கவிழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத், டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நேற்று 2017–18–ம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடக்கவிழா மற்றும் எரிசாராய ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நேற்று ஆலை வளாகத்தில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். ஆலையின் நிர்வாக குழு தலைவர் சிவபாக்கியம் வரவேற்றார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி., கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் தங்கமணி, தொழில்துறை அமைச்சர் சம்பத், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு, கரும்பு அரவையை தொடங்கி வைத்தும், எரிசாராய ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தும் பேசினர்.

விழாவில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது :–

விவசாயிகள் தங்கள் கோரிக்கை குறித்து மனு கொடுத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு செய்யாமல் தி.மு.க.வினர் வேண்டும் என்றே மக்களுக்கு எந்த வகையில் நல்லது செய்தாலும், அதை திசை திருப்பி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என செயல்படுகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கரும்பிற்கான முழு தொகையையும் வழங்கி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் தான் பெருமாநல்லூரில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இணைமின் உற்பத்தி திட்டம் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்பட 12 ஆலைகளில் கடந்த 2010–ம் ஆண்டு ரூ.1,200 கோடி மதிப்பில் தொடங்கி, இதுவரை பணி முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் தகுதியற்ற நபர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தது ஆகும். தி.மு.க. ஆட்சியில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது 24 மணி நேரமும் மின்சாரம் உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரமும், மற்ற பகுதிகளில் 9 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.

விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசும்போது கூறியதாவது:–

2014–ம் ஆண்டு 110 விதிகளின் கீழ் மோகனூர் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள எரிசாராய ஆலைகளில் தலா ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்பில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது இப்பணி முடிவடைந்து தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் கழிவுநீர் வெளியேறுவது தவிர்க்கப்படும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மறுசுழற்சி மூலம் மீண்டும் எரிசாராய ஆலைக்கு பயன்படுத்தி கொள்ளப்படும். விவசாயிகள் நவீன விவசாயத்திற்கு மாற வேண்டும். சொட்டுநீர் பாசனம், நிழல்கூடம் அமைத்தும் சாகுபடியை நவீனபடுத்த வேண்டும். கடந்த 2015–16–ம் ஆண்டில் 3.46 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 2018–19–ம் ஆண்டு பருவத்திலும் அந்த இலக்கை எட்ட விவசாயிகளும், அதிகாரிகளும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.

விழாவில் நாமக்கல் சப்–கலெக்டர் கிராந்திகுமார், மோகனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கருமண்ணன், மோகனூர் நகர செயலாளர் தங்கமுத்து, மோகனூர் நிலவங்கி தலைவர் குணசேகரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நவலடி, வரதராஜன், ராஜாகண்ணன், அஜீத்தன் மற்றும் ஆலை நிர்வாக குழு உறுப்பினர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலை மேலாண்மை இயக்குனர் ராஜசேகரன் நன்றி கூறினார்.


Next Story