மீண்டும் சாலைகைளை ஆக்கிரமித்தால் நடைபாதை வியாபாரிகளை கன்னத்தில் அறைவேன்


மீண்டும் சாலைகைளை ஆக்கிரமித்தால் நடைபாதை வியாபாரிகளை கன்னத்தில் அறைவேன்
x
தினத்தந்தி 19 Nov 2017 4:10 AM IST (Updated: 19 Nov 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்தால் நடைபாதை வியாபாரிகளை கன்னத்தில் அறைவேன் என தானேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே ஆவேசமாக பேசினார்.

தானே,

மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளே காரணம் என நவநிர்மாண் சேனா கடசி குற்றம் சாட்டியது. மேலும் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. இந்தநிலையில் தானேயில் நேற்று நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கலந்து கொண்டு பேசியதாவது:–

தானேயில் நான் பேசும் போது புனே, நாசிக் உள்ளிட்ட பல இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. எனது பேச்சை கேட்க பா.ஜனதா அரசுக்கு தைரியம் இல்லையா?. குஜராத் தேர்தலை முன்னிட்டு பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேலின் செக்ஸ் வீடியோ பற்றி பா.ஜனதா பிரசாரம் செய்து வருவது ஏன் எனக்கு புரியவில்லை. இவ்வளவு கீழ்தரமாக ஏன் நடக்க வேண்டும். தற்போது நவநிர்மாண் சேனா கட்சி நடைபாதை வியாபாரிகளை சாலைகளில் இருந்து அகற்றி இருப்பது ரெயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான வி‌ஷயம். ஆனால் பா.ஜனதாவினருக்கு இழப்பு. அவர்கள் மூலம் கிடைக்கும் ரூ.2 ஆயிரம் கோடி மாமூல் இவர்களுக்கு தற்போது கிடைப்பதில்லை.

நான் மராத்தி மக்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்து வருகிறேன். மேலும் உண்மையாக செயல்பட்டு வருகிறேன். நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக மாநில அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காத நிலையில் இதை நான் செய்தேன். என்னை குற்றம் சொல்கிறார்கள். இதனை கண்டிக்கும் எனது தொண்டர்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு உள்ளதை நான் அறிவேன். தானே கமி‌ஷனர் பரம்பீர்சிங் போலீசார் மீது தாக்குதல் நடத்துபவர்களை கண்டிக்காமல் எனது தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். போலீசார் என்ன போஸ்ட் மேனா?.

நான் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் மாநிலம் முழுவதும் 64 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன. நான் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவேன். மீண்டும் சாலைகளை நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்தால் அவர்களை கன்னத்தில் அறைவேன். நடைபாதை வியாபாரிகளுக்கு எதிரான போராட்டத்தை நான் எனது சுயநலத்திற்காவும், தேர்தலுக்காகவும் நடத்தவில்லை. மராட்டிய மக்களின் வசதிக்காக தான் செய்து வருகிறேன்.

கர்நாடகத்தில் வசிப்பவர்களுக்கு கன்னடம் தெரியவில்லை என்றால் அந்த மாநிலத்தைவிட்டு வெளியேறுங்கள் என அம்மாநில முதல் – மந்திரி கூறுகிறார். அதேபோல தேவேந்திர பட்னாவிசால் பேச முடியுமா?. புல்லட் ரெயில் திட்டத்தை நான் எதிர்ப்பதற்கு காரணம் மும்பையில் இருந்து ஆமதாபாத்திற்கு ஏன் அந்த ரெயில் விட வேண்டும். மும்பை–சென்னை, மும்பை– டில்லி, மும்பை–கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு இடையே புல்லட் ரெயில் விடலாமே.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story