செய்தி தரும் சேதி - 42. தலையாய தலைமை


செய்தி தரும் சேதி  - 42. தலையாய தலைமை
x
தினத்தந்தி 19 Nov 2017 7:17 AM GMT (Updated: 19 Nov 2017 7:17 AM GMT)

நல்ல செய்திகளை வாசிப்பதோடு நின்று விடாமல் அவற்றைத் தூக்கிப் பிடிக்கும்போது, கசிவு நீர்க்குட்டை நிறைந்ததும் அருகிலிருக்கும் கேணிகளிலும் நீர் ஊறுவதைப்போல, நம்முடைய உள்ளத்திலும் அத்தகைய செயல்களைச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும்.

ல்ல செய்திகளை வாசிப்பதோடு நின்று விடாமல் அவற்றைத் தூக்கிப் பிடிக்கும்போது, கசிவு நீர்க்குட்டை நிறைந்ததும் அருகிலிருக்கும் கேணிகளிலும் நீர் ஊறுவதைப்போல, நம்முடைய உள்ளத்திலும் அத்தகைய செயல்களைச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும். அப்போது செய்யும் பணியே தவமாகவும், தியானமாகவும் ஆகி விடும்.

‘செய்யும் தொழிலுன் தொழிலே காண்
சீர்பெற்றிட நீ அருள் செய்வாய்’


என்று பாரதியார் பாடியதற்கிணங்க கரிசனத்துடன் ஆற்றும் காரியம் தரிசனமாக மாறுவது உண்டு.

தலைமையின் நோக்கம் பணி செய்து கிடப்பதே. மகத்தான தலைமை, முற்றிய கதிர்கள்போல பணிவுடன் பணி செய்வது.

திறமையைக் காட்டிலும் எளிமை முக்கியம். திறமையாக இருப்பவர்களை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். கருணை இருப்பவர்கள் மட்டுமே பாசாங்கற்ற எளிமையுடன் பழக முடியும்.

சிலருடைய எளிமை தந்திரமாக இருக்கிறது. சிலருடைய நேர்மை உத்தியாக இருக்கிறது. உண்மையான இதயம் கொண்டவர்கள் தலைமையை வாய்ப்பாகக் கருதுவார்கள்.

நல்ல தலைமை முன்னே இருந்து போராடவும், வெற்றி கிடைத்ததும் பின்னே இருந்து பாராட்டவும் செய்கிற பெருந்தன்மையை உள்ளடக்கியது. அது வெயிலுக்கு வெண்சாமரமாகவும், குளிருக்குக் கம்பளியாகவும் மாறி இதத்தைத் தரும் இயல்பைக் கொண்டது.

தலைமை இன்னொரு தாய்மை. பின்பற்றுபவர்கள் கண்களில் நீர் கசிந்தால் உருகி கைகளால் துடைக்கும் அக்கறை அதற்குத் தேவை. சேவை செய்வதற்கு தலைமை ஒரு வாய்ப்பு. நெருக்கடி நேர்கையில் மக்களை கரை சேர்க்க உதவும் துடுப்பாகவும், ஆடை கிழிகிறபோது அவர்கள் அணிகிற உடுப்பாகவும் இருக்கச் சம்மதிப்பவர்களே இணையற்ற தலைமைக்குச் சொந்தக்காரர்கள்.

எடுத்தவுடன் ஏணியின் உயரப் படியில் கால் வைக்க முடியாது. முதற்படியில் பாதம் பதித்துத் திடப்படுத்திக் கொண்ட பிறகே அடுத்த படிக்கு ஆசைப்படலாம். படிப்படியாக உச்சத்தை அடைவதே உசிதம். இல்லாவிட்டால் ஏற்றுகிற ஏணி புரண்டு விடும். பற்களைக் கீழே பொறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தலைமைப் பண்புகள் அனைவருக்குமே இருக்கின்றன. ஒரு சிலரே அவற்றை வளர்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானோர் அந்த அற்புத விதையை தானியமாக்கி அவித்துத் தின்கிறார்கள். சிலர் மட்டுமே மக்கள் மன வயலில் விதைத்து மகசூல் காண்கிறார்கள்.

பள்ளிப் பருவத்திலிருந்தே தலைமைப் பண்புக்குத் தயார் செய்வது அவசியம். பொறுப்புகளைச் சுமப்பதே தலைமையின் சாமுத்ரிகா லட்சணம்.

வகுப்புத் தலைமையிலிருந்து பள்ளித்தலைமை வரை பரிணாம வளர்ச்சி பெறுவது எல்லா வகைகளிலும் ஒருவருடைய ஆற்றலை செம்மைப்படுத்தும். அவர்கள் வீட்டுப் பிரச்சினையை எதிர்கொள்ளவும், அலுவலகப் பிரச்சினையைக் கிள்ளி எறியவும் வகித்த பொறுப்புகள் வழிபோட்டுக் கொடுக்கும்.

பல தலைவர்கள் பள்ளியிலேயே மேடைகளில் மேன்மை பெற்றவர்கள். பொறுப்புகளைத் தோள்களில் தூக்கி மகிழ்ந்தவர்கள். அனைவரையும் இணக்கமாக நடத்துகிற நேர்த்தி அனுபவத்தால் அவர்களுக்குக் கைகூடுகிறது.

விட்டுக்கொடுத்தல், வலிகளைத் தாங்குதல், தண்டனை களைச் சகித்தல், பசியைப் பொறுத்தல், தாகத்தை மறத்தல், அடியை ஏற்றுக்கொள்ளல், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் இருத்தல் போன்ற பண்புகளை அவர்கள் வளர்த்துக்கொள்ள சின்ன வட்டத்தின் தலைமை பேருதவி புரிகிறது. மனிதனின் ஆளுமையை அவன் வகிக்கும் பொறுப்புகளே தீர்மானிக்கின்றன.

‘இந்தியாவின் செவ்வியல் சரித்திரத்தின் மகத்தான மகுடம் கிராமத்தன்னாட்சி’ என்று ஆப்ரகாம் எராலி எழுதுகிறார். சிற்றூர்கள் அப்போது இனவழிக் குடிகளை அகற்றி, மரபுவழி அமைப்புகளை மாற்றி அடிப்படை அரசியல் அலகாக அங்கீகாரம் பெற்றன. அதில் மக்களாட்சி தழைத்தோங்கி வளர்ந்தது.

ராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டு ஒன்று 12 மாவட்டங்களின் மாநாடு பற்றி தெரிவிக்கிறது. பாண்டிய நாட்டில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் 18 மாவட்டங்களின் பிரதி நிதிகள் ஒன்றுகூடி கோவில் கட்ட நிதி திரட்டியதைக் குறிப்பிடுகிறது. கிராமசபையின் நடவடிக்கைகளைத் தடுப்பவர் களைத் தண்டிக்க அதிகாரம் இருந்ததாக 9-ம் நூற்றாண்டு கல்வெட்டில் காண்கிறோம். சபையில் சரளமாகப் பேசும் இளைஞர்களைக் கவுரவித்ததாகச் சொல்கிறது சாளுக்கிய சாசனம். ஊழலைத் தடுக்க உள்ளூர் நிர்வாகம் விழிப்புடன் இருந்ததாகத் தெரிகிறது.

உத்திரமேரூர் கல்வெட்டு, ‘பொறுப்பாளர்கள் சொத்துக் களைப் பிரகடனப்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று கிராமக் கணக்கர் பொய்க்கணக்கு எழுதியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டதைக் குறிப்பிடுகிறது.

உத்திரமேரூர் கல்வெட்டு உள்ளாட்சி அமைப்புக்கு ஆதர்ஷமான அம்சங்களைப் பதிவுசெய்து வைத்திருக்கும் மகத்தான சரித்திரச் சான்று. நேர்மையை எப்படி ஊர்ஜிதம் செய்ய வேண்டும் என்பதை விலாவாரியாக விவரிக்கிறது. மது அருந்துபவர்களும், குற்றவாளிகளோடு சுற்றித் திரிபவர்களும் தேர்தலில் போட்டியிட முடியாது.

சிற்றூர்களிலும் தலைமைப் பண்பை வளர்க்கும் முயற்சியே உள்ளாட்சி அமைப்பு. அங்கு ஆயத்தமாகிறவர்கள் மாவட்ட அளவில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பொலிவு பெறுகிறார்கள். பிறகு மாநில அளவில் பங்களிப்பைப் பொறுத்து வாய்ப்பு வந்து சேர்கிறது.

மக்கள் தங்கள் பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள அதிகாரமளிப்பது அவசியம். மேலிருந்து கீழ்நோக்கி அதிகாரம் பாயும்போது உண்மையான தேவைகள் உணரப்படுவதில்லை.

ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கின்றன. அனைவருக்கும் எது தேவை என்பதை உச்சியிலிருக்கும் அலுவலரால் நிச்சயம் தீர்மானிக்க முடியாது. மக்களே ஒன்று கூடி விவாதித்து, தேவைகளை முன்னுரிமைப்படுத்தி, நிதியை ஒதுக்கி, பணியைக் கண்காணித்து, தாமதத்தை விரட்டி, விரைவில் முடித்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, பராமரிப்பை ஏற்றுக்கொண்டு சுயச்சார்பு அடைவதே கிராமப் பஞ்சாயத்துகளின் அடிப்படை நோக்கம்.

அந்த ஊரில் யாருக்கு அரசின் நலத்திட்டம் அவசியம் என்பதை அவர்களே கூடி தீர்மானிப்பதுதான் பொருத்தமாயிருக்கும்.

நாகப்பட்டினத்தில் சாராட்சியராகப் பணி புரிந்தபோது பிரதாப ராமபுரம் என்ற சிற்றூருக்குச் செல்ல நேர்ந்தது. அங்கு சாம்ராஜ் என்பவர் உள்ளாட்சித் தலைவராய் இருந்தார். அவ்வூர் கடற்கரை முழுவதும் சவுக்கு மரங்களை சகட்டுமேனிக்கு வளர்த்தார். கடலின் ஈரப்பதத்தில் சவுக்கு வேகமாய் வளர்ந்தது. கடலின் சீற்றம் கரையை அடையாமல் அந்த மரத்தொகுப்பு தந்தது பல்லடுக்குத் தடுப்பு. அந்த ஊரே அழகானது. அவருக்கு இந்திய அரசு வழங்கும் ‘விருட்சமித்ரா’ விருதும் வழங்கப்பட்டது.

பஞ்சாயத்துத் தலைவர் எவற்றையெல்லாம் செய்ய முடியும் என்பதற்குச் சான்றாக எண்ணற்றோர் தமிழகத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். தொழில்முனைவோரை ஊக்கப் படுத்துவதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இல்லங் களுக்கு விநியோகிப்பது வரை இவர்கள் ஆற்றிய பணிகள் மகத்தானவை.

சிற்றூரில் தலைமை ஏற்பவர்கள் அரசுத் திட்டங்களை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல் அவற்றைத் தாண்டி அந்த ஊரை உன்னதமாக்கும் முயற்சிகளில் தங்களைக் கரைத்துக்கொள்ளலாம். அவர்கள் மக்களைத் திரட்டி நீர் நிலைகளைத் தூர்வாரலாம். வாய்க்கால்களை ஆக்கிரமிப்பது நிலத்தடி நீரை பாதிக்கும், வெள்ளத்திற்கு வித்திடும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். குடிநீரைக் காய்ச்சிக் குடிக்கும் அவசியத்தை இல்லந்தோறும் வலியுறுத்தலாம்.

ஊரில் காலியாய் இருக்கும் நிலங்களிலெல்லாம் பயனுள்ள மரங்களை நடுவதற்கு கிராமவாசிகளை இணைக்கலாம். பெருந்தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்கும் மரங்களை நடாமல், உள்ளூர் மக்கள் பறித்துத் தின்று பயன்படுத்தும் மண் சார்ந்த மரங்களை நடுவதற்கு ஊக்கப்படுத்தலாம். மாதம் ஒரு முறை அனைவரும் சேர்ந்து ஊரையே குப்பைகளின்றி சுத்தப்படுத்தலாம்.

இன்று மிகப்பெரிய பிரச்சினை நெகிழித்தாள்கள். அவற்றைக் குறைவாகப் பயன்படுத்த மக்களைத் தூண்டலாம். நெகிழியில்லாத கிராமமாக அதை மாற்றலாம். குப்பைகளை முறையாகக் கழிக்க முன்னேற்பாடுகள் செய்யலாம்.

கிராமத்து நூலகத்தை அனைவரும் பயன்படுத்தப் பழக்கலாம். மாதம் ஒரு புத்தக வாசிப்புப் பட்டறை நடத்தலாம். சாதி சமயமற்ற சமூகத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

மின்னணு சாதனங்களில் மூழ்கி மூச்சுத் திணறும் இளைஞர்களை வெளிகொண்டு வர, விளையாட்டுத் திடல்கள் அமைத்து போட்டிகள் நடத்தி அவர்களுக்குள் பேதமில்லா சமத்துவத்தை நாட்டலாம். அனைவருக்கும் ஒரே இடுகாடு இருப்பதற்கு சம்மதிக்கச் செய்யலாம். அந்த மயானத்தை மலர்த் தோட்டம் நட்டு, சுற்றுச்சுவர் கட்டி, தியான மண்டபம் அமைத்து அமைதி தவழும் இடமாக ஆக்கலாம்.

பள்ளிக் கட்டிடங்களுக்கு வெள்ளை அடிக்கலாம். அனைவருக்கும் எழுதப் படிக்கக் கற்றுத் தரலாம். ஓய்வுபெற்ற ஆசிரியர்களைக் கொண்டு மாலை வகுப்புகள் நடத்தலாம். இப்படி கட்டத்துக்கு வெளியே கணக்கற்ற பணிகளை ஆற்ற முடியும். தலைமை என்பது ஆசனமல்ல, சேவை செய்வதற்கான வாகனம்.

உத்தரப்பிரதேசத்தில் சகஜன்பூர் என்கிற மாவட்டம். அங்கு கிராமப் பிரதான் ஒருவர் பணியால் மருத்துவர். சொந்த மருத்துவமனையும் உண்டு. அவர் பெயர் பிரதீப் சுக்லா. மணிராம் என்கிற பட்டியல் வகுப்பைச் சார்ந்த 45 வயதுத் தொழிலாளருக்கு விபத்து ஏற்பட்டு தலைக்காயத்தால் பிரக்ஞையை இழந்தார். மூளையில் ரத்தம் கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்ட மருத்துவமனை, லக்னோவிற்கு அவரை அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியது. ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும் என்பது தெரிந்ததும் அந்தக் குடும்பம் கையைப் பிசைந்தது.

பிரதீப் சுக்லா தன் மருத்துவமனையில் அவரை அனுமதித்து ஒரு மாதத்திற்கு மேல் இலவசமாக மருத்துவம் பார்த்தார். மணிராமுக்கு நினைவு வந்தது. இப்போது நலமுடன் உள்ளார்.

தலைமை என்பது பணியே தவிர பதவியல்ல. பரோபகாரமே அதற்கு முக்கியத் தேவை.

அத்தனை சிற்றூர்களிலும் அத்தகைய தலைமையே தேவை என்பதே இச்செய்தி தரும் சேதி.

(செய்தி தொடரும்) 

Next Story