டெல்லியில் ஆக்ஸிஜன் அறை


டெல்லியில் ஆக்ஸிஜன் அறை
x
தினத்தந்தி 19 Nov 2017 7:24 AM GMT (Updated: 19 Nov 2017 7:24 AM GMT)

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அங்கு தூய காற்றை சுவாசிக்கும் வகையில் ‘ஆக்ஸிஜன் சேம்பர்’ ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அங்கு தூய காற்றை சுவாசிக்கும் வகையில் ‘ஆக்ஸிஜன் சேம்பர்’ ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்கும் குர்ககானில் உள்ள ‘ஹூடா சிட்டி சென்டர் மெட்ரோ ரெயில் நிலையம்’அருகே அமைந்திருக்கிறது. அரைவட்ட வடிவ கோளம் போன்று வெள்ளை நிறத்தில் பிரமாண்ட தோற்றத்தில் அது காட்சி தருகிறது.

அதன் நுழைவு வாயில் பகுதி முப்பெட்டக கண்ணாடி போன்று பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இருக்கும் இந்த ‘ஆக்ஸிஜன் சேம்பரில்’ ஏராளமான செடிகள் வளர்க்கப்படுகின்றன. அவை அனைத்துமே காற்று மாசுவை கட்டுப்படுத்தி தூய்மையான காற்றை வெளியிடும் தாவர வகைகளை சேர்ந்தவையாகும். இந்த ‘ஆக்ஸிஜன் சேம்பர்’ பார்வையாளர்களை கவரும் வகையில் அழகிய தோற்றத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு வளர்க்கப்படும் தாவர இனங்களும் அழகிய நேர்த்தியுடன் அடுக்கடுக்காக வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் இங்கு வந்து தூய்மையான காற்றை சுவாசித்து தங்களை ஆசுவாசிப்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு அமர்ந்து படிப்பதற்காக புத்தகங்களும், பத்திரிகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

‘‘இந்த ஆக்ஸிஜன் அறைக்குள் வந்து பொதுமக்கள் தங்கள் நேரத்தை செலவிட வேண்டும். தங்களுடைய நுரையீரல்களுக்கு தூய காற்றை கொடுக்கக் கூடிய ஒரு இடமாக இதனை அவர்கள் நினைக்க வேண்டும். அவர்கள் இங்கு வந்து அமர வேண்டும் என்பதற்காக சில புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வைத்திருக்கிறோம். இங்குள்ள சுற்றுச்சூழல் அவர்களுக்கு புத்துணர்ச்சியூட்டுவதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்’’ என்கிறார், நிகில் க்ரோவர். இவர் காற்றை தூய்மைப்படுத்தும் உள் அலங்கார செடிகளை வளர்க்கும் அமைப்பை நிர்வகித்து வருகிறார். இவருடைய நிறுவனம், மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸிஜன் சேம்பரை அமைத்திருக்கிறது.

இங்கு 12 வகையான தாவர இனங்களை சேர்ந்த செடிகள் வளர்க்கப்படுகின்றன. உள் பகுதியில் மட்டுமின்றி வெளிப்பகுதிகளிலும் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் மரங்கள், செடிகள் வளர்க்கப்படுகின்றன. அவை அந்த இடத்தையே பசுமை குடிலாக உருமாற்றி யிருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அருகில் இருப்பதால் இங்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். தற்போது காற்று மாசுபாடு பிரச்சினை அதிகரித்திருப்பதால் அங்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

‘‘ஆக்ஸிஜன் அறையில் உள்ள அனைத்து தாவரங்களும் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன. காற்று மாசு நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில் அழகிய தோற்றத்துடன் பசுமையான பின்னணியில் அமைந்திருக்கும் இதனை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இது பாராட்டத்தக்க முயற்சியாகும்’’ என்கிறார்கள், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள்.

இந்த ஆக்ஸிஜன் சேம்பரில் சுத்தமான காற்றை சுவாசிக்க பொதுமக்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. 

Next Story