தூத்துக்குடியில் இலங்கை அகதிகள் முகாமில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


தூத்துக்குடியில் இலங்கை அகதிகள் முகாமில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2017 4:30 AM IST (Updated: 20 Nov 2017 12:07 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இலங்கை அகதிகள் முகாமில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர் ராம்தாஸ்நகர், தாப்பாத்தி, குளத்துவாய்ப்பட்டி ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்து உள்ளது. இந்த முகாம்களில் மொத்தம் 403 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ராம்தாஸ் நகர் முகாமில் செல்லத்துரை மகன் குமார்(வயது 41) என்பவர் வசித்து வருகிறார்.

இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 1990–ம் ஆண்டு இலங்கையில் இருந்து படகு மூலம் மண்டபத்துக்கு வந்தார். அங்கு இருந்து கடந்த 2009–ம் ஆண்டு தாளமுத்துநகர் ராம்தாஸ்நகர் முகாமுக்கு வந்தார்.

இவர் வீட்டின் குளியல் அறை அருகே ஒரு சிறிய தொட்டியில் கஞ்சா செடியை வைத்து வளர்த்து வந்தாராம். இந்த செடி சுமார் 3 அடி உயரத்துக்கு வளர்ந்து இருந்தது. அருகில் 2 சிறிய கன்றுகளும் இருந்தன.

இது குறித்து கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாராணி, தனிப்பிரிவு ஏட்டு செல்லப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி கஞ்சா செடியையும், வீட்டில் காயவைத்து இருந்த கஞ்சா இலைகளையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story