தப்பி ஓடிய பெண் மாவோயிஸ்டு எங்கே? துப்பு துலக்க போலீசார் தீவிரம்


தப்பி ஓடிய பெண் மாவோயிஸ்டு எங்கே? துப்பு துலக்க போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 20 Nov 2017 3:45 AM IST (Updated: 20 Nov 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் தப்பி ஓடிய பெண் மாவோயிஸ்டு எங்கே பதுங்கி இருக்கிறார்? என்பது பற்றி துப்பு துலக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் மாவோயிஸ்டு நவீன்பிரசாத் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் ரஞ்சித், நீலமேகம், கண்ணன் என்ற செந்தில், ரீனாஜாய்ஸ்மேரி, காளிதாஸ், பகத்சிங், அவருடைய தங்கை செண்பகவல்லி ஆகியோர் தப்பிவிட்டனர். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்றவர்களை வலைவீசி தேடினர்.

கோர்ட்டில் மனு தாக்கல்

அதன்தொடர்ச்சியாக, மாவோயிஸ்டுகள் ரஞ்சித், நீலமேகம், கண்ணன் என்ற செந்தில், ரீனாஜாய்ஸ்மேரி ஆகியோர் அடுத்தடுத்து போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். சமீபத்தில், மாவோயிஸ்டு காளிதாசை கேரள போலீசார் கைது செய்தனர். அவரை கொடைக்கானல் வழக்கில் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக கொடைக்கானல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவரை உடனடியாக கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

ஏனென்றால், காளிதாசை மாவோயிஸ்டுகளில் முக்கிய நபராக கேரள போலீசார் கருதுகிறார்கள். இதனால் அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். அவர்கள் விசாரணை நடத்தி முடித்தால் தான், திண்டுக்கல் மாவட்ட போலீசார் கொடைக் கானல் வழக்கில் அவரை கைது செய்ய முடியும்.

புலனாய்வுத்துறை அதிகாரி

இதற்கிடையே, கொடைக் கானல் வழக்கில் தேடப்பட்ட மற்றொரு மாவோயிஸ்டு பகத்சிங், சேலம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தார். அவர் மீது சேலம் மாவட்டத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.கேரளாவில் இருந்து வந்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரியும் அவரிடம் விசாரணை நடத்தினார். அதன்பிறகு, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரையும் கொடைக்கானல் வழக்கில் கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

காளிதாஸ், பகத்சிங் ஆகியோரை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினால், பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என கொடைக்கானல் போலீசார் கருதுகிறார்கள். குறிப்பாக, தலைமறைவாக இருக்கும் மாவோயிஸ்டு பகத்சிங்கின் தங்கை செண்பகவல்லி பதுங்கி இருக்கும் இடம் பற்றி தெரியவரலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது.

விரைவில் கைது

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘பகத்சிங்கின் தங்கை தான் செண்பகவல்லி. இதனால், பகத்சிங்கை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால், தலைமறைவாக இருக்கும் அவர் பற்றி தகவல் கிடைக்கும் என கருதுகிறோம். விரைவில் அவரை கைது செய்துவிடுவோம்’ என்றார். 

Related Tags :
Next Story