கூட்டுறவு வாரவிழா: 92 மகளிர் குழுக்களுக்கு ரூ.4¾ கோடி கடனுதவி அமைச்சர்கள் வழங்கினர்


கூட்டுறவு வாரவிழா: 92 மகளிர் குழுக்களுக்கு ரூ.4¾ கோடி கடனுதவி அமைச்சர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 19 Nov 2017 10:45 PM GMT (Updated: 2017-11-20T03:18:40+05:30)

கூட்டுறவு வாரவிழாவில் 92 மகளிர் குழுக்களுக்கு ரூ.4 கோடியே 89 லட்சம் கடனுதவியை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் வழங்கினார்கள்.

வேலூர்,

வேலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 64-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா வேலூரில் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். கோ.அரி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, ஜி.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை வரவேற்றார். கூட்டுறவு ஒன்றிய தலைவர் சரவணன் கூட்டுறவு வாரவிழா உறுதிமொழியை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் கலந்து கொண்டு 92 மகளிர் குழுக்களுக்கு ரூ.4 கோடியே 89 லட்சம் கடனுதவி மற்றும் கடந்தாண்டு சிறப்பாக செயல்பட்ட 145 சங்கங்களுக்கு கேடயங்கள், 65 ரேஷன் கடை ஊழியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.

விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

பால் உற்பத்தி அதிகரிப்பு

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாமல் இருந்தது. கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா சங்க தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுத்தார். வேலூர் மாவட்டத்தில் 952 கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன.

வேலூர் மாவட்டத்தில் 2¾ லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களால் சுமார் 3¾ லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் பலமடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

சங்கங்கள் மூலம் மகளிர் குழுக்களுக்கு பல கோடி கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்மூலம் பெண்கள் தொழில் முனைவோர்களாக மாறி வருகிறார்கள். ஆண், பெண் சமம் என்ற நிலை உருவாக வேண்டும். பெண்களுக்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. வருங்காலத்தில் விவசாயிகள் மதிப்புமிக்கவர்களாக நாடு முழுவதும் போற்றப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் நிலோபர்கபில் பேசியதாவது:-

ரூ.435 கோடி பயிர்க்கடன்

வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1,744 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 83 ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய மற்றும் பொது வினியோக பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் பெற்ற 79 ஆயிரத்து 318 சிறு, குறு விவசாயிகளுக்கு சுமார் ரூ.332 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு துறையின் மூலம் 2016-17-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.218 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் ரூ.435 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.181 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் விஜயன், வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் ராஜா, கூட்டுறவு அச்சக தலைவர் டபிள்யு ஜி.மோகன், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் வேலழகன், வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் காமாட்சி மற்றும் ஏ.எல்.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் சரக துணைப்பதிவாளர் பாஸ்கரன் நன்றி கூறினார். விழாவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ தொகுத்து வழங்கினார். 

Next Story