தமிழ்நாட்டில் புதிய பாடத்திட்ட மாற்றத்தை முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்


தமிழ்நாட்டில் புதிய பாடத்திட்ட மாற்றத்தை முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 20 Nov 2017 4:30 AM IST (Updated: 20 Nov 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் புதிய பாடத்திட்ட மாற்றத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் நம்பியூரை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நம்பியூர் வட்டார பொது நலச்சங்கங்களின் சார்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பாராட்டு விழா நம்பியூரில் நேற்று நடந்தது.

விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது தலையாய கடமை அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) நிச்சயம் தொடங்க வேண்டும் என்பதாகும். ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த 412 மையங்கள் ஜனவரி மாதத்தில் செயல்பட தொடங்கும். மேலும் வரும் காலத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் மூலம் கல்வி கற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி 32 மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் டிசம்பர் மாதம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் உருவாக்கப்படும். மைக்ரோ சாப்ட் நிறுவனம் மூலம் 6 மாதத்துக்கு ஒரு முறை 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆங்கில புலமையை மேம்படுத்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் கழிப்பறை கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் புதிய பாடத்திட்ட மாற்றத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (அதாவது இன்று) தொடங்கி வைக்கிறார். பின்னர் பாடத்திட்ட மாற்றம் குறித்து பொதுமக்களின் கருத்து அறியப்படும். அவைகளில் சிறந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்படும். உலக தரத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு திவாலாகி விட்டது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். அரசின் நிதி நிலை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெளிவாக கூறிவிட்டனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறையால் பணியில் சேர முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவிடம் டிசம்பர் மாதத்தில் அறிக்கை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறையை ரத்து செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story