ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான் குற்றவாளிகள் நாடாளக்கூடாது நடிகர் கமல்ஹாசன் ஆவேசம்


ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம் தான் குற்றவாளிகள் நாடாளக்கூடாது நடிகர் கமல்ஹாசன் ஆவேசம்
x
தினத்தந்தி 20 Nov 2017 4:45 AM IST (Updated: 20 Nov 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் ஆவேசமாக கருத்து தெரிவித்து உள்ளார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இதைத்தொடர்ந்து சமூக, அரசியல் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். சமீபத்தில் கொசஸ்தலை ஆற்றில் மின் கழிவுகள் கொட்டப்படுவதால் வட சென்னைக்கு வெள்ள ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தார்.

அந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு மக்களிடமும் குறைகள் கேட்டார். பிறந்தநாள் விழாவை ரத்து செய்து ஏழைகளுக்காக இலவச மருத்துவ முகாம் நடத்தினார். டெல்லியில் நடைபெற உள்ள விவசாயிகள் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்தார்.

இந்து தீவிரவாதம் பரவுவதாகவும் குற்றம் சாட்டினார். நேற்று குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்று பரபரப்பான கருத்து வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின் அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆக வேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழு தயவாய்.”

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஜெயிலுக்கு சென்ற அவரது தோழி சசிகலா, இளவரசி வீடுகளில் 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய்க்கு வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிமாற்றம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்ப்பு, பினாமி பெயர்களில் வாங்கிய சொத்து விவரங்கள், போலி நிறுவனங்கள் ஆகியவற்றை கண்டுப்பிடித்துள்ளனர்.

உச்சகட்டமாக போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டிலும் சோதனை நடத்தி அங்கிருந்த லேப்டாப், பென் டிரைவ், ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள் ஆகியவற்றை அள்ளிச்சென்றுள்ளனர். இந்த நிலையில் கமல்ஹாசன் இவ்வாறு டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருப்பது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story