சசிகலா அறையில் ஆதாரங்கள் கிடைத்ததாக கூறுவது தவறு வருமானவரி சோதனை அ.தி.மு.க.வை அழிக்க உச்சகட்ட சதி


சசிகலா அறையில் ஆதாரங்கள் கிடைத்ததாக கூறுவது தவறு வருமானவரி சோதனை அ.தி.மு.க.வை அழிக்க உச்சகட்ட சதி
x
தினத்தந்தி 19 Nov 2017 11:15 PM GMT (Updated: 19 Nov 2017 10:11 PM GMT)

போயஸ்கார்டனில் சசிகலா அறையில் ஆதாரங்கள் கிடைத்ததாக கூறுவது தவறு, வருமான வரிசோதனை அ.தி.மு.க.வை அழிக்க நடைபெறும் உச்சகட்ட சதி என்று, தஞ்சையில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் அ.தி.மு.க. (அம்மாஅணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திவாகரனின் உடன் பிறந்த சகோதரி சசிகலா. ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகாலம் உடன் இருந்து அவருக்கு உதவிகள் செய்தவர் சசிகலா. அந்த ஆதங்கம், வருத்தத்தில் தனது சகோதரி சசிகலாவை, ஜெயலலிதா காப்பாற்ற வில்லை என்று திவாகரன் கூறி இருப்பார். இதனால் இறந்து போன ஜெயலலிதாவை தாக்கி பேசியது என்று அர்த்தம் ஆகாது. இதை தவறாக பார்க்காதீர்கள். இதை அரசியல் ஆக்கக்கூடாது.

ஆடிட்டர் குருமூர்த்தி, போயஸ்கார்டனில் நடந்த சோதனையில் சசிகலா அறையில் இருந்து லேப்டாப், பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார். அது செயல்படாத கணினி. எனது அறையில் கூட, நான் எடுத்த புகைப்படங்கள் பல பென்டிரைவ்களில் உள்ளது. அது போன்று உள்ள பென்டிரைவ் தான் அது. அதில் ஆதாரம் உள்ளது என்று குருமூர்த்தி எப்படி கூறுகிறார். இது மக்களிடம் அ.தி.மு.க.வை அழிக்க நடைபெறும் முயற்சியின் உச்சகட்ட சதி ஆகும். இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும்.

ஜெயலலிதா இருக்கும் திசை நோக்கி வணங்குவதாக கூறும் தலைவர்கள் கூட இப்போது போயஸ்கார்டன் பக்கம் செல்ல பயப்படுகிறார்கள். பதவியில் இருப்பவர்கள் தான் கட்சியை உடைக்கிறார்கள். பதவியில் இல்லாவிட்டால் சசிகலா தலைமையில் தான் செயல்படுவார்கள். ஒருசிலர் செய்த தவறுகளால் தான் போயஸ்கார்டனில் சோதனை நடக்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னைப்பார்த்து கட்சியில் எங்கு இருந்தார் என்று கேட்கிறார். முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாமல் அவர் பிதற்றுகிறார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின்னர் ஜெயலலிதாவுக்கு, நானும் சசிகலாவும் மெய்க்காப்பாளராக இருந்தோம். நான் மகன் போல இருந்து அவரை பாதுகாத்தேன். ஆனால் என்மீது பெரா வழக்கு உள்பட பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டது. இதனால் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஜெயலலிதா முடிவு செய்து என்னை பெரியகுளம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வைத்தார். அதில் நான் தமிழகத்திலேயே அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். என்னை ஜெயலலிதா பேரவை பொதுச்செயலாளராக ஆக்கினார். அப்போது எடப்பாடி பழனிசாமி எங்கு இருந்தார் என்று தெரியாது.

2001 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சீட் கொடுக்கப்படவில்லை. 2006 தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமியை கேளுங்கள். இவ்வளவு பெரிய கட்சியில் ஒருசிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும். அதற்காக அவர்கள் கட்சியை விட்டு ஒதுக்கப்பட்டவர்கள் அல்ல. எங்களால் பதவிக்கு வந்து விட்டு, தங்களை காப்பாற்றிக்கொள்ள, தங்கள் குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றிக்கொள்ள வழக்குகளில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக கட்சியை காட்டிக்கொடுத்து, ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற தைரியத்தில் பேசுபவர்கள் செய்த சதியால் தான் நாங்கள்கட்சியை விட்டு விலக்கப்பட்டோம்.

சசிகலாவை இவர்கள் சேர்ந்து தான் பொதுச்செயலாளர்களாக தேர்வு செய்தனர். பின்னர் பன்னீர்செல்வம் சரியில்லை என்று கூறி சசிகலாவை முதல்-அமைச்சராக்க முடிவு செய்தனர். ஆனால் அவரால் பதவி ஏற்க முடியவில்லை. ஜெயலலிதாவுக்கு உதவியாக எஸ்.டி.எஸ்., முத்துசாமி, கண்ணப்பன் போன்றவர்கள் இருந்தனர். அது போல 2001-ல் 4 பேர் இருந்தனர். அதில் இருந்த வைத்திலிங்கம், முனுசாமி என்ன ஆனார்கள்?.

இவர்கள் செய்த சதியால் தான் ஜெயலலிதா காலத்தில் நாங்கள் ஒதுக்கப்பட்டோம். செங்கோட்டையன், பழனிசாமி, தங்கமணி, வேலுமணி போன்ற நிர்வாகிகள் தான் என்னை துணை பொதுச்செயலாளர்களாக ஆக்கினர். ஆர்.கே.நகர் தேர்தலில் நான் போட்டியிட்டேன். ஆட்சி மன்ற குழு கூடிதான் என்னை வேட்பாளராக முடிவு செய்தது. எடப்பாடி பழனிசாமி ஆர்.கே.நகரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் என்ன பேசினார் என்று தெரியும். ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி வருவேன் என்ற போது கூட நான், நீங்கள் முதல்-அமைச்சர். அலுவலக வேலையை பாருங்கள். வேண்டாம் என்றேன். ஆனால் அவர் வந்து தொப்பியை அணிந்து கொண்டு பிரசாரம் செய்தார்.

சம்பாதிக்கிறவர்கள் தங்களை காப்பாற்ற, சுயநலம் தானே தவிர வேறு எதுவும் இல்லை. கட்சி எக்கேடு கெட்டால் அவர்களுக்கு என்ன?. அதன் உச்சகட்டம் தான் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது இவர்கள் எதுவும் கருத்து தெரிவிக்காமல், பொதுமக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டவுடன் 2 நாளைக்குப்பிறகு தற்போது ஒவ்வொருவரும் கருத்தை சொல்கிறார்கள். எந்த கருத்தை சொன்னாலும் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியது வருத்தம் அளிக்கிறது.

ஆனால் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் தற்போது 2 நாளைக்குப்பிறகு பிதற்றுகிறதை பார்த்தாலே தெரியும் அவர்களுக்கு பயம் ஏற்பட்டுவிட்டு என்று. தமிழகத்தின் நலனை இவர்கள் காப்பது இல்லை. ஜெயலலிதா அரசு என்று கூறிக்கொள்ள இவர்களுக்கு தகுதி இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் போதும் என்கிறார்கள். வடக்கே இருந்து யார் வந்தாலும் அவர்கள் காலைப்பிடித்துக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். இவர்களை பற்றி பேசி எனது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்ல முன்னோட்டம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story