மஞ்சுவிரட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 32 பேர் காயம்


மஞ்சுவிரட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 32 பேர் காயம்
x
தினத்தந்தி 20 Nov 2017 3:33 PM IST (Updated: 20 Nov 2017 3:33 PM IST)
t-max-icont-min-icon

திருமயத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 32 பேர் காயமடைந்தனர்.

திருமயம்,

திருமயத்தில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சந்தனக்காப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று திருமயம் தாமரை கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் சீறிபாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் பிடித்தனர்.

அப்போது சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் முத்துச்சாமி (வயது 20), விஜய் (25), உதயக்குமார் (24), சிவக்குமார் (20), சதீஸ் (25), அர்ஜூனன் (45), சரவணன் (22), குமார் (28), மெய்யப்பன் (35), சூர்யா (18), சிவகார்த்திக்கேயன் (24), ராஜா (45), செல்வம் (30), சவரிராஜா(32) மற்றும் பார்வையாளர்கள் உள்பட 32 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை விழாக்குழுவினர் உடனடியாக மீட்டு, அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மஞ்சுவிரட்டிற்கான ஏற்பாடுகளை திருமயம் தாமரை வயல் ஆயக்கட்டுத்தாரர்கள், ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். மஞ்சுவிரட்டைக் காண திருமயம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். மஞ்சுவிரட்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story