தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேர் கைது


தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2017 3:39 PM IST (Updated: 20 Nov 2017 3:38 PM IST)
t-max-icont-min-icon

கரூரில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 27½ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வெங்கமேட்டை சேர்ந்த குருதேவ்(வயது 25), தாந்தோன்றிமலை காளியப்பனூரை சேர்ந்த போகர்பிரதீப்(20), திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சின்னாளப்பட்டியை சேர்ந்த ராயத் அலியின் மகன் ஹம்சாஉசேன்(19), பழனியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைதானவர்களிடம் இருந்து 27½ பவுன் தங்க நகைகளும், ஒரு பாஸ்போர்ட்டும் மீட்கப்பட்டன. 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் நேற்று பார்வையிட்டார். மேலும் தனிப்படை போலீசாரை அவர் பாராட்டினார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

கைதானவர்களில் 2 பேர் பசுபதிபாளையம், வேலாயுதம்பாளையம் பகுதியிலும், சிறுவன் உள்பட மற்ற 2 பேர் வெங்கமேடு, வாங்கல், தென்னிலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று சங்கிலி பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டுள்ளனர். தொடர்ந்து சங்கிலி பறிப்பு சம்பவங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மணல் திருட்டை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் இந்த ஆண்டில் 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, இன்ஸ்பெக்டர்கள் பிருத்விராஜ், சந்திரசேகரன், செந்தில்குமார், அருள்மொழிஅரசு (தனிப் பிரிவு), சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசேர்வை மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story