பயிர் காப்பீடு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்


பயிர் காப்பீடு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Nov 2017 4:31 PM IST (Updated: 20 Nov 2017 4:31 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு 15 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பெரியகருப்பன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருப்பத்தூர் எம்.எல்.ஏ.யுமான கே.ஆர்.பெரியகருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டம் என்று அழைக்கப்படும் சிவகங்கையில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. பெரிய அளவிலான நீர்த்தேக்கங்கள் இல்லாத வானம் பார்த்த பூமியாக இன்றளவும் இருந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததோடு, வட்டியில்லா விவசாய கடன், மானிய கடன், இடுபொருள் மானியம் கொடுத்து விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர். தற்போது மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் நீர்நிலைகளில் தண்ணீரின்றி கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. மத்திய-மாநில அரசுகள் வறட்சியை போக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளன. இந்த ஆண்டு வேளாண் பயிர் காப்பீட்டிற்கு வருகிற 30-ந்தேதி கடைசி நாள் என்று அறிவித்துள்ளனர். அத்துடன் விவசாயிகள் அதனை பயனடைய விடாமல் கடுமையான நடைமுறைகளையும் அறிவித்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்று பெற்று, மத்திய குழு வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதில் அடங்கலை பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதில் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி கணக்கு தொடங்கவே விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதற்கிடையில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் பலருக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை.


ராமநாதபுரத்தில் இருந்து சிவகங்கை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு முழுமையாக இன்னும் தனது அதிகார வரம்பை சரிசெய்ய முடியாமல் உள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட குறுந்தனக்கோட்டை, கற்களத்தூர், செலுகை, சிறுநல்லூர், கிளியூர் ஆகிய ஊராட்சிகள் இன்றுவரை பயிர் காப்பீடு செய்ய ராமநாதபுரம் மாவட்டத்தையே நம்பியுள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும். மேலும் பயிர் காப்பீடு செய்ய கூடுதலாக 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. விவசாய பிரிவின் சார்பில் மாவட்ட விவசாயிகளை திரட்டி கண்டன கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story