டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடவடிக்கை எடுக்க சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு


டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடவடிக்கை எடுக்க சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 21 Nov 2017 4:15 AM IST (Updated: 21 Nov 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் டாஸ்மாக் கடையில் சட்ட விரோதமாக 24 மணிநேரமும் மது விற்பனையால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். அப்போது கோவை மாவட்ட திருநங்கைகள் மறுவாழ்வு மற்றும் விழிப்புணர்வு சமூக நலச்சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-

பொள்ளாச்சி தாலுகாவில் திருநங்கைகள் 40 பேர் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். இதில் 27 பேருக்கு ஆனைமலை பகுதியில் வீட்டுமனை பட்டா கொடுத்து, அளந்து கொடுத்து விட்டனர். ஆனால் வீடு கட்டி கொடுக்கவில்லை. இதனால் ஒராண்டாக இடம் இருந்தும் வீடு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றோம். எனவே வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 பேருக்கு முதியோர் உதவித்தொகை கடந்த 11 மாதங்களாக வரவில்லை. மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து வீடு கட்டி கொடுக்கவும், முதியோர் உதவித்தொகை வழங்கவும் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தென்சித்தூரை சேர்ந்த செந்தில்வேல் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆனைமலை ஒன்றியம் தென்சித்தூர் ஊராட்சியில் 39 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது. ஆடுகள் ஆதரவற்ற விதவை பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சொந்த வீடு இல்லாத தகுதியான பயனாளிகளுக்கு வழங்காமல் தோட்டம் மற்றும் செல்வ செழிப்புடன் இருப்பவர்களுக்கும், இத்திட்டத்தால் ஏற்கனவே பயனடைந்தவர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் மறு ஆய்வு செய்து விற்பனை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை கண்டுபிடித்து தகுதியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

களத்துப்புதூரை சேர்ந்த மலைவாழ் மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திவான்சாபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட களத்துப்புதூர், ஜே.ஜே. நகர், வடக்குபாறை மேடு, மேற்கு பாறை மேடு ஆகிய நான்கு கிராமங்களில் சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றோம். வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனுவை உரிய பரிசீலனை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பா.ஜனதா மாவட்ட செயலாளர் பாலு, நகர தலைவர் மணிகண்டகுமார் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி ஏ.டி.எஸ்.சி. தியேட்டர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் பெண்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

பொள்ளாச்சியில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் அனைத்து கடைகளிலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் பொதுமக்களுக்கு இடையே தகராறுகள் ஏற்படுகிறது. பொள்ளாச்சி மரப்பேட்டை பாலத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் கலந்து சேறும், சகதியுமாக இருப்பதால் அங்கு பன்றிகளும், நாய்களும் சுற்றி திரிந்து வருகிறது. அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. அர்த்தநாரிபாளையம் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அர்த்தநாரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லார் திம்மாடம் அருகில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சுமார் 100 அடி இடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வனத்துறை சார்பாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன் விடப்பட்டு உள்ளது. தற்போது அந்த இடத்தின் வழியாக வனத்துறை அனுமதி பெறாமல் குழாய்கள் கொண்டு செல்லப்படுகிறது. இலவச மின்சாரம் மூலம் நல்லாற்றில் மோட்டார் வைத்து தண்ணீர் திருடி வணிக நோக்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே தாங்கள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குப்புச்சிபுதூர் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு எதிர்ப்பு

ஒடையகுளம் பேரூராட்சி குப்புச்சிபுதூரில் பொதுமக்கள் மரங்கள் நட்டு வளர்த்து வருகிறோம். திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் அந்த இடத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தற்போது டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் பெருகி வரும் நிலையில் திடக்கழிவு மேலாண்மைக்கு குப்பைகளை கொட்டினால் மிகவும் சிரமப்படும்.

மேலும் பேரூராட்சி தேர்ந்தெடுத்த இடத்தில் வண்டிபாதையை பல விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து வேறு இடத்தை தேர்வு செய்ய பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.


இந்து முன்னணி தெற்கு ஒன்றிய செயலாளர் குமாரசாமி கொடுத்த மனுவில் கூறியிருப் பதாவது:-

மாக்கினாம்பட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கரியபெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி கோவில் நிலத்தை மீட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story