கந்து வட்டி கொடுமை: ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை கிரையம் செய்து மோசடி


கந்து வட்டி கொடுமை: ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை கிரையம் செய்து மோசடி
x
தினத்தந்தி 21 Nov 2017 4:45 AM IST (Updated: 21 Nov 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் கந்து வட்டி கொடுமை காரணமாக ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை கிரையம் செய்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மூதாட்டி தனது மருமகள், பேரனுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக கலெக்டரிடம் தெரிவித்தனர்.

இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரை சேர்ந்த நல்லமணி(வயது 87) என்ற மூதாட்டி ஆம்புலன்சில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். உடன் அவருடைய மருமகள் ஜான்சிராணி(42), பேரன் கெவின்(10) ஆகியோரும் வந்திருந்தனர். நான்கு சக்கர நாற்காலியில் நல்லமணியை வைத்து கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர். அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது மகன் ஜவகர் சீனிவாசன். மருமகள் ஜான்சிராணி. பேரன் கெவின் ஆகியோருடன் வசித்து வருகிறேன். எனது மகன் தொழில் நஷ்டம் மற்றும் அதிகப்படியான செலவு காரணமாக எங்களுக்கு கடன் பெருகியது. இதனால் நல்லம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ், பொன்னிவாடியை சேர்ந்த முத்துசாமி ஆகியோரிடம் எனது மகன் கடன் கேட்டுள்ளான். அதற்கு அவர்கள் எனது பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை அடமானமாக கேட்டுள்ளனர். அவசரமான நிலை என்பதால் வீட்டு பத்திரத்தை வைத்து கடந்த 2009-ம் ஆண்டு ரூ.15 லட்சம் கடன் வாங்கினோம்.

இந்தநிலையில் கடந்த 2011-ம் ஆண்டு எனது வீட்டின் மின்சாரம் கட்டண ரசீது, வீட்டுவரி, குடிநீர் கட்டணம் ஆகியவை தங்கராஜ் பெயரில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தோம். எங்களின் சூழ்நிலையை பயன்படுத்தி ரூ.1 கோடி மதிப்புள்ள எனது வீட்டை ஏமாற்றி அவர் பெயரில் கிரையம் செய்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதனால் தங்கராஜூக்கும், எனது மகனுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் எனது மகன் கடந்த ஜூலை மாதம் இறந்து விட்டார்.

இப்போது நான், எனது மருமகள், பேரன் ஆகியோர் ஆதரவின்றி தவிக்கிறோம். எனது வீட்டை காலி செய்யும்படி தங்கராஜ் கூறி வருகிறார். ரூ.15 லட்சம் பணத்துக்கு கந்து வட்டி போட்டு தற்போது ரூ.95 லட்சம் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்கிறார். தங்கராஜ் எங்களிடம் பணம் கேட்டு பேசுவதை வீடியோவில் பதிவு செய்துள்ளோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார். 

Next Story