பிளாஸ்டிக் தொட்டி தயாரிப்பு தொழிற்சாலையால் மூச்சுத்திணறல் முககவசம் அணிந்து வந்து கலெக்டரிடம் மனு


பிளாஸ்டிக் தொட்டி தயாரிப்பு தொழிற்சாலையால் மூச்சுத்திணறல் முககவசம் அணிந்து வந்து கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Nov 2017 4:15 AM IST (Updated: 21 Nov 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே பிளாஸ்டிக் தொட்டி தயாரிப்பு தொழிற்சாலையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறி முககவசம் அணிந்து வந்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கேயம் தாலுகா படியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகத்தில் முககவசம் அணிந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் உதயங்காட்டு தோட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் பிளாஸ்டிக் தொட்டி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. பழைய பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து அரைத்து மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் தொட்டிகள் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை எந்தவொரு பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கொடிய நச்சுப்புகையால் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமம் அடைந்து வருகிறார்கள். பல்வேறு சுவாச நோய்களும் ஏற்படும் வாய்ப்புள்ளது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பிளாஸ் டிக் தொட்டி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

இலவச வீட்டுமனைப்பட்டா

கூட்டத்தில் குண்டடம் ஒன்றியம் குங்குமபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியில் ஆதிதிராவிட மக்கள் 150 பேருக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மந்தை புறம்போக்கு என்பதை நத்தம்புறம்போக்காக வகை மாற்றம் செய்து அதிகாரிகள் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கினார்கள். அந்த இடத்துக்கு அருகே 30 குடும்பத்தினர் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்கள் வீட்டுக்கு சொத்துவரி, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டும் பெற்றுள்ளோம். எனவே நாங்கள் வசிக்கும் பகுதியையும் நத்தம் புறம்போக்காக மாற்றி இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

Next Story