முட்டை விலை உயர்ந்தாலும் உரிய நிதி ஒதுக்கப்பட்டு சத்துணவு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்


முட்டை விலை உயர்ந்தாலும் உரிய நிதி ஒதுக்கப்பட்டு சத்துணவு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
x
தினத்தந்தி 21 Nov 2017 4:30 AM IST (Updated: 21 Nov 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

முட்டை விலை உயர்ந்தாலும், உரிய நிதி ஒதுக்கப்பட்டு சத்துணவு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி,

எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை தந்தார். முட்டை விலை மட்டுமல்ல எந்த விலை உயர்ந்தாலும் அதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டு இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பல்வேறு ஆட்சி மாற்றங்கள் வந்தபோதும் சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதே தவிர நிறுத்தப்படவில்லை. அந்த அளவுக்கு மக்களோடு இணைந்த சத்துணவு திட்டத்தில் எந்த குறைபாடும் இருக்காது.

எம்.ஜி.ஆர். பற்றி அறியாதவர்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொச்சைப்படுத்துகிறார்கள். நூற்றாண்டு விழாவை ஜெயலலிதா ஆன்மா நடத்துகிறது. ஜெயலலிதாவின் வழியிலான ஆட்சி தொடரக்கூடாது என்பதற்காக சிலர் பேசி வருகின்றனர். இந்த அரசை எப்படியாவது கவிழ்க்க வேண்டும், ஆட்சி மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தி.மு.க.வினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதில் வெற்றி பெற்றதால், தி.மு.க.வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதிலும் வெற்றி பெற்றோம். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு முதல்வராகத்தான் இருப்பார். பல தடைகளை தாண்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும். 2021-ம் ஆண்டும் ஜெயலலிதா வழியிலான அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story