கர்நாடக சட்டசபையில் மந்திரி திம்மாபூருக்கு எதிராக பா.ஜனதா உரிமை மீறல் பிரச்சினை


கர்நாடக சட்டசபையில் மந்திரி திம்மாபூருக்கு எதிராக பா.ஜனதா உரிமை மீறல் பிரச்சினை
x
தினத்தந்தி 21 Nov 2017 4:45 AM IST (Updated: 21 Nov 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

அரசு விழாவில் தன்னை புறக்கணித்ததாக மந்திரி திம்மாபூருக்கு எதிராக பா.ஜனதா உறுப்பினர் கோவிந்த் கார்ஜோள் கர்நாடக சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்.

பெலகாவி,

சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை கூட்டத்தொடரின் 6-வது நாள் கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு மீண்டும் சுவர்ண சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகரின் அனுமதி பெற்று, மந்திரி திம்மாபூருக்கு எதிராக பா.ஜனதா உறுப்பினர் கோவிந்த் கார்ஜோள் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பினார்.

அவர் பேசுகையில், “எனது தொகுதியில் உள்ள மாடகனூர் கிராமத்தில் கலால்துறை மந்திரி திம்மாபூர், பொதுப்பணித்துறை தொடர்பான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினார். இதில் கலந்துகொள்ள எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை. என்னை புறக்கணித்துவிட்டார். இதில் விதி மீறல் நடந்துள்ளது. எனது உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவை நடத்திய மந்திரி திம்மாபூரை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும். எனக்கு எதிராக போட்டியிட்டு 4 முறை தோல்வி அடைந்தவர் மந்திரி திம்மாபூர். பின்வாசல் வழியாக மந்திரி பதவியை பெற்றுள்ள அவர் எனக்கு எதிராக இவ்வாறு செயல்படுவது சரியல்ல“ என்றார்.

அப்போது குறுக்கிட்ட வருவாய்த்துறை மந்திரி காகோடு திம்மப்பா, யாரும் பின்வாசல் வழியாக வந்து மந்திரி ஆகவில்லை என்றார். அதைத்தொடர்ந்து பேசிய ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் சிவானந்தபட்டீல், “நீங்கள் (கோவிந்த் கார்ஜோள்) ஒரு முறை மந்திரியாக இருந்தபோது எனது தொகுதியில் நீர் பாசன திட்டத்தை தொடங்கி வைத்தீர்கள். தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை“ என்றார்.

இதற்கு பதிலளித்த கோவிந்த் கார்ஜோள், “நான் அந்த திட்டத்தை தொடங்கி வைக்கவில்லை. திட்ட பணிகளை ஆய்வு செய்தேன். ஒருவேளை உங்களை நான் புறக்கணித்து இருந்திருந்தால், நீங்கள் எனக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்திருக்க வேண்டும்“ என்றார். கோவிந்த் கார்ஜோளுக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் விசுவேஸ்வர ஹெக்டே காகேரி, போப்பையா ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினர்.

அப்போது சபாநாயகர் கே.பி.கோலிவாட், கோவிந்த் கார்ஜோள் மட்டும் பேசட்டும். நீங்கள் இருக்கையில் அமருங்கள் என்று கூறி அவர்களை உட்கார வைத்தார். எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து, “மூத்த உறுப்பினராக இருக்கும் கோவிந்த் கார்ஜோளை புறக்கணித்து விழா நடத்தியது சரியல்ல. அவருக்கு எதிராக தேர்தல் களத்தில் போட்டியிட்டவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது“ என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல், உங்கள்(பா.ஜனதா) ஆட்சி காலத்தில் இவ்வாறு நடந்துள்ளது என்று கூறினார். உடனே பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், நீங்கள் அப்போது உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்து இருக்க வேண்டும் என்றார். அப்போது ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் சிவலிங்கேகவுடா பேசுகையில், “மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. அதில் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுப்பது இல்லை. இது உரிமை மீறல் பிரச்சினை ஆகாதா?“ என்றார்.

சபாநாயகர் கே.பி.கோலிவாட் குறுக்கிட்டு, “மத்திய அரசு நடத்தும் விழாக்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுப்பது இல்லை என்ற விஷயத்தில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சபை உறுப்பினர்களின் உரிமையை காக்க வேண்டியது எனது பொறுப்பு. கோவிந்த் கார்ஜோள் எழுப்பியுள்ள உரிமை மீறல் பிரச்சினை குறித்து தகவல்களை பெற்று உரிய முடிவு எடுப்பேன்“ என்றார். அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. 

Next Story