சிவன்கோவில் துவாரபாலகர் சிலையை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தியதாக சுபாஷ்சந்திரகபூர் மீது புதிய வழக்கு


சிவன்கோவில் துவாரபாலகர் சிலையை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தியதாக சுபாஷ்சந்திரகபூர் மீது புதிய வழக்கு
x
தினத்தந்தி 22 Nov 2017 4:45 AM IST (Updated: 22 Nov 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம் அத்தாளநல்லூர் சிவன்கோவில் துவாரபாலகர் சிலையை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தியதாக சுபாஷ்சந்திரகபூர் மீது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கும்பகோணம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சித்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சிலைகள் திருட்டு போனது. இதைப்போல அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 8 சிலைகள் திருட்டு போனது. இந்த இரு வழக்குகளிலும் அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகபூருக்கு தொடர்பு உள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை தேடி வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மன் நாட்டில் சுபாஷ்சந்திரகபூர் கைது செய்யப்பட்டு தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் பழுவூர் சிவன்கோவிலில் 6 ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக பழுவூர் போலீசார் சுபாஷ்சந்திரகபூர் மீது வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் இருந்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு கடந்த செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டது. இந்த வழக்கையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரர் சிவன்கோவிலில் இருந்து இரு துவார பாலகர் சிலை கடத்தப்பட்டு, இந்த சிலைகள் மும்பை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டது. இந்த வழக்கில் லெட்சுமிநரசிம்மன், ஊமைத்துரை, அண்ணாதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மும்பை அந்தேரியில் கலைப்பொருட்கள் விற்பனை மையம் நடத்தி வரும் வல்லபபிரகாஷ் (வயது86), அவருடைய மகன் ஆதித்தியாபிரகாஷ்(48) ஆகியோரை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு துவார பாலகர் சிலையை கடத்தியதாக சுபாஷ்சந்திரகபூர் மீது நேற்று புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்காக வீரவநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மலைச்சாமி கும்பகோணத்துக்கு வந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் அதற்கான ஆவணங்களை வழங்கினார்.

இதற்காக நேற்று கும்பகோணம் கோர்ட்டுக்கு சுபாஷ்சந்திரகபூர், வல்லபபிரகாஷ், ஆதித்தியாபிரகாஷ் ஆகியோர் வந்தனர். இதைத்தொடர்ந்து விக்கிரமங்கலம், உடையார்பாளையம் போலீஸ் சரக வழக்குகள் வருகிற 28-ந் தேதிக்கும்(செவ்வாய்க்கிழமை), பழவூர் போலீஸ் நிலைய வழக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 5-ந் தேதிக்கும்(செவ்வாய்க்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது. வீரவநல்லூர் போலீஸ் நிலைய வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களை சுபாஷ்சந்திரகபூர் திட்டினார். இதனால் கும்பகோணம் கோர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


Next Story