மேலூர் பகுதி விவசாயிகள் போராட்டம் எதிரொலி: வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
மேலூர் பகுதி விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 56 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 1–ந்தேதி முதல் அணையில் இருந்து மதுரை, திருமங்கலம் பகுதி விவசாய தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தேனி மாவட்டத்தில் 18–ம் கால்வாயில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனை கண்டித்து மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வைகை அணையில் இருந்து மேலூர் பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை பாசனத்துக்கு திறக்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து மேலூர் பகுதி விவசாயத்துக்காக வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திருமங்கலம் பிரதான கால்வாயில் 200 கனஅடியும், பெரியாறு பிரதான கால்வாயில் 700 கனஅடியுமாக பிரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று முதல் 7 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே போதிய மழை இல்லாததால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில், அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 56.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 420 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்துக்காகவும், மதுரை குடிநீர் தேவைக்காகவும் வினாடிக்கு 1,860 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.