மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம் வைப்பாற்றில் மணல் அள்ள அனுமதிக்க வலியுறுத்தல்


மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம் வைப்பாற்றில் மணல் அள்ள அனுமதிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Nov 2017 4:15 AM IST (Updated: 22 Nov 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் வைப்பாற்றில் மணல் அள்ள அனுமதிக்க வலியுறுத்தி நேற்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் வைப்பாற்றில் உள்ளூர் கட்டுமான தேவைக்காக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்க கோரி, மாட்டு வண்டி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். தொடர்ந்து விளாத்திகுளம், ஆற்றங்கரை, பூசனூர் ஆகிய பகுதிகளில் வைப்பாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு வருவாய் துறையினர் இடங்களை கண்டறிந்து அரசுக்கு பரிந்துரைத்தனர்.

ஆனால் வைப்பாற்றில் மாட்டு வண்டிகளின் மூலம் மணல் அள்ள அனுமதிக்காமல், லாரிகள் மூலம் மணல் அள்ள முயற்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து வட்டார மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம், மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், விளாத்திகுளம் வைப்பாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலையில் விளாத்திகுளம் வைப்பாற்றின் தரைமட்ட பாலத்தின் வழியாக மணல் அள்ளும் போராட்டத்தில் ஈடுபட ஏராளமான மாட்டு வண்டிகளில் தொழிலாளர்கள் அணிவகுத்து சென்றனர். அவர்களை, விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் வழிமறித்தனர். இதை தொடர்ந்து தரைமட்ட பாலத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மல்லிகா, மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தலைவர் பாலமுருகன், செயலாளர் தம்பிராஜ், துணை தலைவர்கள் சித்தாண்டி, சர்க்கரை, கருப்பசாமி, துணை செயலாளர்கள் பொன்ராஜ், காளிராஜ், கணேசன், சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் ஜோதி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் தெய்வேந்திரன், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாலையில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் ரமேஷ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், வைப்பாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்க விரைவில் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மாட்டு வண்டிகளுடன் திரும்பி சென்றனர். 

Next Story