தூத்துக்குடியில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: பயனாளிகளுக்கு ரூ.155 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


தூத்துக்குடியில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: பயனாளிகளுக்கு ரூ.155 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 22 Nov 2017 4:30 AM IST (Updated: 22 Nov 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 31 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.155 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

தூத்துக்குடி,

தமிழக அரசின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த விழா கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று(புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகிறார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

பின்னர் ரூ.380 கோடியே 94 லட்சம் மதிப்பிலான 214 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.8 கோடியே 8 லட்சம் மதிப்பிலான 8 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 31 ஆயிரத்து 610 பயனாளிகளுக்கு ரூ.155 கோடியே 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர். முடிவில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நன்றி கூறுகிறார்.

முன்னதாக விழா அரங் கில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கக் கூடிய புகைப்பட கண் காட் சியை பார்வையிடுகி றார். தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள 13 கண்காட்சி அரங்குகளையும் முதல்- அமைச்சர் பார்வையிடுகிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு காலை 10.15 மணிக்கு வருகிறார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட கலெக் டர் வெங்கடேஷ், அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சித.செல்லப்பாண்டியன் ஆகியோர் வரவேற்கிறார்கள். வரவேற்பை பெற்றுக்கொண்ட முதல்- அமைச்சர் அங்கிருந்து மறவன் மடத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். பின்னர் மாலை 3 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்த பிறகு கார் மூலம் மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி தூத்துக்குடியில் கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் சுமார் 4 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விழா நடைபெறும் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை வரவேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங் களில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. கட்சி கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு உள்ளன. விழா மேடை அமைந்து உள்ள பகுதியில் எம்.ஜி.ஆரின் பிரமாண்டமான கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டு உள்ளன. 

Next Story