எடியூரப்பா குறித்து சித்தராமையா கூறிய கருத்தை நீக்க கோரி கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா தர்ணா


எடியூரப்பா குறித்து சித்தராமையா கூறிய கருத்தை நீக்க கோரி கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா தர்ணா
x
தினத்தந்தி 22 Nov 2017 4:00 AM IST (Updated: 22 Nov 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பா குறித்து சித்தராமையா கூறிய கருத்தை நீக்க கோரி கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா தர்ணா போராட்டம் நடத்தியது.

பெலகாவி,

எடியூரப்பா குறித்து சித்தராமையா கூறிய கருத்தை நீக்க கோரி கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா தர்ணா போராட்டம் நடத்தியது. மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று முதல்–மந்திரி கூறினார்.

கர்நாடக அரசு ஆதரவு

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவில் கடந்த 13–ந் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் 7–வது நாள் கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு சுவர்ண சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பா.ஜனதா உறுப்பினர் சி.டி.ரவி மதுவிலக்கு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்–மந்திரி சித்தராமையா பதிலளிக்கையில் கூறியதாவது:–

மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தியது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. இதனால் அந்த மாநிலங்கள் மதுவிலக்கை நீக்கின. கர்நாடகத்தில் முன்னாள் முதல்–மந்திரி நிஜலிங்கப்பாவின் ஆட்சியில் மதுவிலக்கு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் அதை அமல்படுத்த முடியவில்லை. நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே இது வெற்றி பெறும். மதுவிலக்கு குறித்து மத்திய அரசு ஒரு கொள்கையை வகுத்தால் அதற்கு கர்நாடக அரசு ஆதரவு வழங்கும்.

சாராய விற்பனைக்கு தடை

இதற்கு முந்தைய கூட்டணி ஆட்சியில் சாராய விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. சாராயத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், ஏழைகளுக்கு லாபத்தை விட பாதிப்பு தான் அதிகம். இதற்கு முன்பு மது குடிப்பதற்கு குறைந்த செலவு செய்தவர்கள், இப்போது அதிகமாக செலவழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான வியாபாரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆயினும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஏழைகளுக்கு மட்டுமின்றி மாநில அரசின் கஜானாவுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சாராயத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் ஊழலும் அதிகரித்துவிட்டது. மது விற்பனையில் இலக்கு எதையும் கர்நாடக அரசு நிர்ணயிக்கவில்லை. இதற்கு அரசு அழுத்தமும் கொடுப்பது இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

சாராயம் விற்பனைக்கு தடை

சித்தராமையா பதிலளிக்கும்போது, முந்தைய கூட்டணி ஆட்சியில் சாராயம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு அப்போது துணை முதல்–மந்திரியாக இருந்த எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்தார் என்றார். இதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சித்தராமையாவின் இந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுந்து நின்று, பா.ஜனதாவுக்கு எதிராக பேசினர். இதனால் சபையில் கூச்சல்–குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், “சித்தராமையா சொல்வது பொய். இதுபோல் இந்த சபைக்கு தவறான தகவலை தெரிவிப்பது சரியல்ல. இந்த சபையின் உறுப்பினராக இல்லாத ஒருவரின் பெயரை இங்கே குறிப்பிடுவது சரியா?. எனவே, சித்தராமையாவின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்“ என்றார்.

நீக்க முடியாது

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் கே.பி.கோலிவாட், “முதல்–மந்திரி சித்தராமையா, அவதூறு ஏற்படுத்தும் வகையிலோ, தவறான நோக்கத்திலோ, மரியாதை குறைவாகவோ கருத்து எதையும் இங்கே தெரிவிக்கவில்லை. பேசும்போது எடியூரப்பாவின் பெயரை இயல்பாக பயன்படுத்தியுள்ளார். அவரது இந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது“ என்று அறிவித்தார்.

இதை ஏற்க மறுத்த பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை நடத்தினர். மேலும் அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்–குழப்பம் நிலவியது. இருக்கைக்கு திரும்பும்படி சபாநாயகர் பல முறை வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுவிலக்கு திட்டம் இல்லை

அப்போது பேசிய சித்தராமையா, “இப்போது மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று நீங்கள்(பா.ஜனதா) சொல்கிறீர்கள். நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இதை ஏன் செய்யவில்லை. கர்நாடக அரசிடம் மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை“ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா உறுப்பினர்கள், “பா.ஜனதா ஆட்சி காலத்தில் தான் கர்நாடகத்தில் சாராயத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதே போல் உங்களால் முடிந்தால், மதுவிலக்கை அமல்படுத்துங்கள்“ என்றனர்.

இதனால் கோபம் அடைந்த சித்தராமையா, “நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். உங்களுக்கு மானம், மரியாதை எதுவும் இல்லை. கலாசாரம் தெரியாது. இந்து கலாசாரம் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். தீபிகா படுகோனே வி‌ஷயத்தில் உங்கள் கட்சி தலைவரின் கருத்தை பார்த்தால், நீங்கள் யார் என்பது தெரியும். சாராயத்திற்கு தடை விதித்ததால் கர்நாடகத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும்“ என்றார்.

சபையை ஒத்திவைத்தார்

மீண்டும் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், “சித்தராமையா வாய்க்கு வந்தபடி பேசுகிறார். நாங்கள் பேசும்போது விதிமுறை பற்றி சபாநாயகர் கூறுகிறார். முதல்–மந்திரிக்கு எந்த விதிமுறையும் இல்லையா?. சித்தராமையாவின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்“ என்றார். அப்போது ஜனதா தளம்(எஸ்) கட்சி துணைத்தலைவர் ஒய்.எஸ்.வி.தத்தா பேசுகையில், “சாராயத்திற்கு தடை விதித்தபோது அதை எடியூரப்பா எதிர்த்தார் என்று குமாரசாமி கூறி இருக்கிறார்“ என்றார். இதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபையில் கூச்சல்–குழப்பம் மேலும் அதிகரித்தது.

இதற்கிடையே பேசிய சித்தராமையா, “வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் பா.ஜனதாவினர் தான். நாங்கள் இல்லை“ என்றார். மேலும் சித்தராமையாவின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் குரலை உயர்த்தி கோ‌ஷங்களை எழுப்பினர். கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து சபையை சபாநாயகர் சிறிது நேரம் ஒத்திவைத்தார்.

குற்றம்சாட்டி பேசவில்லை

அரை மணி நேரத்திற்கு பிறகு சபை மீண்டும் கூடியது. அப்போதும் பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இதனால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், “இந்த அரசுக்கு சபையை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதனால் தேவை இல்லாத வார்த்தைகளை சித்தராமையா பயன்படுத்துகிறார். அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியே தீர வேண்டும்“ என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய சித்தராமையா, “நான் இந்த சபையில் யாருக்கு எதிராகவும் குற்றம்சாட்டி பேசவில்லை. உண்மையை பேசி இருக்கிறேன். எனது கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. நான் பேசியது சரியாக இருக்கிறது. குமாரசாமி இங்கு தான் இருக்கிறார். அவர் சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?. நீங்கள் மக்கள் விரோதி, வளர்ச்சி விரோதிகள். மந்திரி கே.ஜே.ஜார்ஜ் வி‌ஷயத்தில் அரசியல் செய்கிறீர்கள். குமாரசாமி உண்மையை இங்கே சொல்ல வேண்டும்“ என்றார். ஆனால் குமாரசாமியோ மவுனமாக இருந்தார்.

கடும் வாக்குவாதம்

அப்போது பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. சபையில் அமளி ஏற்பட்டதை அடுத்து உணவு இடைவேளை வரை சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார். உணவு இடைவேளைக்கு பிறகு சபை கூடியதும் பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

எடியூரப்பா குறித்து சித்தராமையா கூறிய கருத்துக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர். அவைக்குறிப்பில் இருந்து எடியூரப்பா குறித்து சித்தராமையாவின் கூறிய கருத்தை நீக்கியே தீர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.


Next Story