போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மறியல் போராட்டம் பெண்கள் உள்பட 260 பேர் கைது


போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மறியல் போராட்டம் பெண்கள் உள்பட 260 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2017 4:30 AM IST (Updated: 22 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

பணப்பலன்களை வழங்கக்கோரி போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 260 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நேற்று சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள சேலம் கோட்ட போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன், பொருளாளர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாநில துணை பொதுச்செயலாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

1–ந் தேதி பென்சனை உறுதிப்படுத்தி பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். பஞ்சப்படி 139 சதவீதமாக உயர்த்தி 24 மாத நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். ஐகோர்ட்டில் தெரிவித்தப்படி ஓய்வு காலப்பலன்களை தவணைகள் இல்லாமல் மொத்தமாக வழங்கிட வேண்டும். 2003–க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களை பழைய பென்சன் திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி கமி‌ஷனர் ராமசாமி, இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், குமரேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், எங்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை தமிழ அரசு உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றனர். இதனால் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உள்பட 260 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூறுகையில், ‘போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் கடந்த 7 ஆண்டுகளாக முறையாக வழங்கப்படவில்லை. இதனால் மருந்து கூட வாங்க வழியில்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இதே நிலை நீடித்தால் ஓய்வு பெற்றவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்த உள்ளோம்’ என்றனர்.


Next Story