போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவர் கைது
திருத்தணி பெரியார் நகரை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருக்கு சொந்தமான 18 சென்ட் நிலம் அதே பகுதியில் உள்ளது.
திருவள்ளூர்,
திருத்தணி பெரியார் நகரை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 63). இவருக்கு சொந்தமான 18 சென்ட் நிலம் அதே பகுதியில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக ஞானசேகரன் சென்றார். அப்போது அங்கு வேறு ஒருவர் அந்த நிலத்தை சுத்தப்படுத்தி கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அந்த நபரிடம் கேட்டபோது தனது நிலம் எனக்கூறினார்.
இதைத்தொடர்ந்து ஞானசேகரன் திருத்தணி சார்பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்தபோது, அந்த நிலத்தை அர்ஜூனன் (57) என்பவர் ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் தயார் செய்தும் அபகரித்தது தெரியவந்தது. இதுகுறித்து ஞானசேகரன் திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அர்ஜூனனை கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.