சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.- காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.- காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2017 10:45 PM GMT (Updated: 2017-11-23T00:50:30+05:30)

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை,

ரேஷன்கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்கள் வழங்காததை கண்டித்தும் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ரேஷன்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திருக்கோர் கர்ணம் மேலமேட்டுத் தெரு ரேஷன் கடை முன்பு திமு.க. நகர செயலாளர் நைனா முகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குன்றாண்டார்கோவிலில் ரேஷன்கடை முன்பு ஒன்றிய தி.மு.க., காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் செல்லபாண்டியன், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் கவிதைப்பித்தன், குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கடாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராயவரம் ரேஷன்கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அரிமளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்.ராமலிங்கம், என்ஜினீயர் ரா.கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 17 இடங்களில் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஆவுடையார்கோவில் அமுதம் அங்காடி முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் தி.மு.க. தலைமை சட்ட திருத்தக்குழு உறுப்பினர் ராமநாதன் முன்னிலை வகித்தார். தி.மு.க. ஒன்றிய துணைச்செயலாளர் பூங்குடி மாணிக்கம், காங்கிரஸ் கட்சி நகரசெயலாளர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கரூரில் தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பொன்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விராலிமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் தலைமை வகித்தார். சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க.வை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விராலிமலை கிழக்கு ஒன்றிய பகுதியை சேர்ந்த மண்டையூர், நீர்பழனி, ஆவூர், பேராம்பூர், குன்னத்தூர், மருதம்பட்டி, மாத்தூர், பாலாண்டம்பட்டி, வேலூர், மதயானப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ரேஷன்கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மண்டையூர் ரேஷன் கடை முன்பு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் தலைமையிலும், நீர்பழனியில் விராலிமலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மூ.பி.மணி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவைத்தலைவர் பூபதி, ஒன்றிய பொருளாளர்் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி ரேஷன்கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தெற்கு ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் அழகப்பன், மாவட்டதுணைச்செயலாளர் சின்னையா, காங்கிரஸ் வட்டாரத்தலைவர் செல்வராஜ் உள்பட காங்கிரஸ் மற்றும் தி.மு.க.கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அன்னவாசல் அருகே உள்ள பெருமநாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நிஜாமுதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 6 ரேஷன்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் தவபாஞ்சலான் தலைமையில் 9 ரேஷன் கடைகள் முன்பு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கறம்பக்குடி நகர தி.மு.க சார்பில் புதுக்கோட்டை சாலையில் உள்ள ரேஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொன்னமராவதி வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் முத்து தலைமையில் சடையம்பட்டி, காரையூர், வையாபுரி ஆகிய ஊர்களில் உள்ள ரேஷன்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்பொதுக்குழு உறுப்பினர் தென்னரசு, ஒன்றிய துணை செயலாளர் திலகவதி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story