ராஜபாளையம் அருகே விவசாயிகள் சாலை மறியல்


ராஜபாளையம் அருகே விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-23T01:10:55+05:30)

ராஜபாளையம் அருகே பாசனத்திற்கு அணையை திறக்க வலியுறுத்தி 200–க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் சாஸ்தா கோவில் அணையை நம்பி சேத்தூர், தளவாய்புரம், முகவூர், இளந்திரை கொண்டான் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் நீர் ஆதாரமாக விளங்கும் சாஸ்தா கோவில் அணை முழுக் கொள்ளவான 33 அடியை எட்டியது.

இதையடுத்து சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள் முக்கிய பயிரான நெற்பயிருக்கான நடவு வேலையை தொடங்கினர். எனினும் அணையில் இருந்து பல நாட்கள் ஆகியும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை, இதனால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சி சார்பில் பெரியகுளம், நகரிக்குளம் விவசாய சங்க தலைவர் கணேசன் மாடசாமி தலைமையில் 200–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேவதானம் தென்காசி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதவு தெரிவித்தார். ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி, ராமர் உள்பட பலர் மறியலில் கலந்து கொண்டனர். மறியலின் போது விவசாயிகளிடமும், எம்.எல்.ஏ.விடமும், தாசில்தார் சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை அதிகாரி ஜான்சி பேச்சுவார்த்தை நடத்தி 2 தினங்களுக்குள் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story