அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் கையில் உடைந்த ஊசியுடன் போராடும் பெண்


அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் கையில் உடைந்த ஊசியுடன் போராடும் பெண்
x
தினத்தந்தி 22 Nov 2017 10:45 PM GMT (Updated: 22 Nov 2017 8:05 PM GMT)

கும்பகோணம் அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் கையில் உடைந்த ஊசியுடன் பெண் ஒருவர் போராடி வருகிறார். ஊசியை அகற்ற மீண்டும் மருத்துவமனைக்கு வந்த போது அவரை தரையில் படுக்க வைத்த அவலம் ஏற்பட்டுள்ளது

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறை அருகே உள்ள கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா(வயது28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் சசிகலாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சசிகலாவின் கையில் குளுகோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்டிருந்த ஊசி எடுக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த ஊசி பாதி உடைந்து சசிகலாவின் கைக்குள் சென்றுள்ளது. இதுகுறித்து அங்குள்ள செவிலியர்களிடம் அவர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து சசிகலாவின் முழங்கை வரை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். இதில் ஊசி எதுவும் இல்லை என்று கூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற சசிகலாவுக்கு கையில் தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று அவர் தனது கை முழுவதும் எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். அதில் அவரது கையின் முழங்கைக்கு மேல் உடைந்த ஊசி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சசிகலா வந்து அந்த எக்ஸ்ரேவை டாக்டர்களிடம் காட்டினார். அதை பார்த்த டாக்டர்கள், கையில் உடைந்த ஊசி இருப்பதை உறுதிப்படுத்தினர். கையில் இருந்து ஊசியை எடுக்க 1 மாதம் ஆகும் என்பதால் அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சசிகலா சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் படுக்கை வசதி குறைபாட்டால் சசிகலாவை தரையில் படுக்க வைத்துள்ளனர். அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் கையில் ஊசியுடன் போராடும் சசிகலாவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்ற வேண்டும் என அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story