அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்த கவர்னருக்கு உரிமை உள்ளது; எச்.ராஜா பேட்டி


அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்த கவர்னருக்கு உரிமை உள்ளது; எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 22 Nov 2017 10:30 PM GMT (Updated: 22 Nov 2017 8:21 PM GMT)

அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்த கவர்னருக்கு உரிமை உள்ளது என்று ஈரோட்டில் எச்.ராஜா கூறினார்.

ஈரோடு,

பா.ஜ.க. பிரமுகரின் இல்லத்திருமண வரவேற்பு விழா ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஈரோட்டிற்கு வந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவில் 18 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலங்களில் எந்தவொரு மத பிரச்சினையும் ஏற்படவில்லை. நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் ஆதரவு தெரிவித்து பேசுவது கண்டிக்கத்தக்கது. பத்மாவதி திரைப்படத்தை ஆதரித்து பேசுபவர்கள் தேசபக்தனாகக்கூட இருக்க முடியாது. சித்தூர் ராணி பத்மினியின் கதை பத்மாவதி என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றி கொள்ளும் நாட்டின் அரண்மனையில் உள்ள பெண்களின் கற்பை சூறையாடுவார்கள். அப்போது பெண்கள் தங்களது மானத்தை காப்பாற்றி கொள்வதற்காக உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. சித்தூர் மன்னர் இறந்த பிறகு ராணி பத்மினி வீரத்துடன் போரிட்டார். அந்த யுத்தத்தில் அவர் தோல்வி அடைந்த பிறகு தனது மானத்தை காப்பாற்றி கொள்வதற்காக உயிரை மாய்த்து கொண்டார். அந்த ராணி பத்மினிக்கு ராஜஸ்தானில் பல இடங்களில் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்கள்.

அந்த ராணியை மன்னருடன் ‘டூயட்’ பாடும் வகையில் படம் இயற்றி இருப்பது அசிங்கப்படுத்தும் செயல். எனவே ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பது இந்து மதத்தை இழிவுபடுத்தும் கமல்ஹாசனின் தீய நோக்கமாகும். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் இந்து விரோத சக்தியை வலுப்படுத்தும்.

தமிழக கவர்னர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் என்று நான் கூறவில்லை. அவர்களுடன் கலந்தாய்வு நடத்தி உள்ளார். கவர்னருக்கு அத்தகைய உரிமை இருக்கிறது.

அ.தி.மு.க.வில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கிபோல் செயல்படுவதாக அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதுபோல் தெரியவில்லை. இருந்தாலும், அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். எனவே அதுதொடர்பாக நான் கருத்து கூற முடியாது.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.


Next Story