சர்க்கரை விலை உயர்வை கண்டித்து 99 ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை விலை உயர்வை கண்டித்து 99 ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-23T02:02:58+05:30)

ரே‌ஷன்கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் 99 ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்

தர்மபுரி,

தமிழகத்தில் உள்ள ரே‌ஷன்கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் நேற்று ரே‌ஷன் கடைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்றனர். தர்மபுரி கடைவீதி, குமாரசாமிப்பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர், நல்லம்பள்ளி ஒன்றியம் தடங்கம், எர்ரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க.நகர செயலாளர் தங்கராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டிமுருகேசன், பொருளாளர் தியாகராஜன், மாவட்ட பிரதிநிதி சுருளிநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் முல்லைவேந்தன், மோகன், அன்பழகன், ரவி, காங்கிரஸ் கட்சி நகரசெயலாளர் செந்தில்குமார், மாவட்ட நிர்வாகி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரே‌ஷன்கடைகளில் சர்க்கரை விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பபட்டது.

பென்னாகரம் சந்தைதோப்பு பின்புறம் உள்ள ரே‌ஷன் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியசெயலாளர் செல்வராஜ், நகரசெயலாளர் வீரமணி, ஒன்றிய நிர்வாகி செல்வராஜ், பொதுக்குழுஉறுப்பினர் வானவில் சண்முகம், முன்னாள் ஒன்றியசெயலாளர் காளியப்பன், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் ரே‌ஷன்கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

காரிமங்கலம் ஒன்றியம் கெங்குசெட்டிப்பட்டியில் உள்ள ரே‌ஷன் கடைமுன்பு மாவட்ட அவைத்தலைவர் மாதையன் தலைமையிலும், காரிமங்கலத்தில் மாவட்ட துணைத்தலைவர் சூடப்பட்டி சுப்பிரமணி தலைமையிலும் ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் பாலக்கோட்டில் உள்ள ரே‌ஷன் கடைமுன்பு கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏரியூர் ஒன்றியம் ஜக்கம்பட்டியில் கட்சியின் மாவட்ட பொருளாளர் தர்மச்செல்வன் தலைமையிலும், ஏரியூரில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையிலும், கிருஷ்ணாபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் தலைமையிலும், கடகத்தூரில் ஒன்றியசெயலாளர் சேட்டு தலைமையிலும் தி.மு.க.வினர் ரே‌ஷன்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நல்லம்பள்ளி ஒன்றியம் அதியமான்கோட்டையில் ஒன்றியசெயலாளர் சண்முகம் தலைமையிலும், எச்சனஅள்ளியில் ஒன்றிய நிர்வாகி சண்முகம் தலைமையிலும், சாமிசெட்டிப்பட்டியில் மாவட்ட பிரதிநிதி துரைசாமி தலைமையிலும் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் மொரப்பூர் சந்தைமேடு பகுதியில் உள்ள ரே‌ஷன்கடை முன்பு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் வாசு, மணி, வட்டாரதலைவர் பொன்பிரகாசம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள ரே‌ஷன்கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் நகர செயலாளர் ஜெயசந்திரன் மற்றும் நிர்வாகிகள், தி.மு.க. தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரே‌ஷன் கடைகள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொதிகைவேந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வேடம்மாள், மாநில நிர்வாகி கியாஸ் ராஜேந்திரன் மற்றும் சண்முகநதி, தமிழழகன் உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 99 ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 2 எம்.எல்.ஏ.க்கள்., தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். ரே‌ஷன்கடைகளில் சர்க்கரை விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story