பிரபல திருடன் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது


பிரபல திருடன் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 23 Nov 2017 4:30 AM IST (Updated: 23 Nov 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பிரபல திருடன் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை தேவாங்க பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 5-ந் தேதி தாதுபாய்குட்டை ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்த கண்ணன் (வயது 32) என்பவர் அவரை வழிமறித்தார். பின்னர் அவர் கத்தியை காட்டி மிரட்டி ரஜினிகாந்திடம் இருந்து ரூ.1,200 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்தார். இதை பார்த்து தடுக்க வந்த பொதுமக்களுக்கு கண்ணன் கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி, சேலம் டவுன், அஸ்தம்பட்டி, சேலம் அரசு ஆஸ்பத்திரி ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் பிரபல திருடான கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை பரிசீலித்து கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு கண்ணன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story