குமாரசாமியை ஆட்சி பீடத்தில் அமர வைக்க மக்கள் விரும்புகிறார்கள் தேவேகவுடா பேட்டி


குமாரசாமியை ஆட்சி பீடத்தில் அமர வைக்க மக்கள் விரும்புகிறார்கள் தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 22 Nov 2017 9:30 PM GMT (Updated: 2017-11-23T03:00:10+05:30)

குமாரசாமியை ஆட்சி பீடத்தில் அமர வைக்க மக்கள் விரும்புகிறார்கள் என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு,

குமாரசாமியை ஆட்சி பீடத்தில் அமர வைக்க மக்கள் விரும்புகிறார்கள் என்று தேவேகவுடா கூறினார்.

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மக்கள் விரும்புகிறார்கள்

குமாரசாமியை ஆட்சி பீடத்தில் அமர வைக்க மக்கள் விரும்புகிறார்கள். அவர் முதல்–மந்திரியாக இருந்தபோது சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். இது தான் மக்கள் அவரை விரும்ப காரணம். கடந்த 10 ஆண்டுகால பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆட்சிகளை மக்கள் பார்த்து வெறுப்பு அடைந்துவிட்டனர்.

கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். கர்நாடகத்தில் மாநில கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை நாங்கள் தேர்வு செய்துவிட்டோம். அந்த பட்டியலை வெளியிடுமாறு குமாரசாமியிடம் நான் கூறினேன்.

ஆணவம் அதிகரித்துவிட்டது

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அதன் பிறகு வேட்பாளர் பட்டியலை வெளியிடும்படியும் அவரிடம் மீண்டும் நான் கூறிவிட்டேன். சித்தராமையா, பசவராஜ் ராயரெட்டி ஆகியோர் எந்த கட்சியில் இருந்தபோது வளர்ந்தனர்?. துணை முதல்–மந்திரி பதவியை சித்தராமையாவுக்கு கொடுத்தது யார்?.

1996–ம் ஆண்டு முதல்–மந்திரி பதவி தனக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று சித்தராமையா சொல்கிறார். அப்போது எனக்கு எதிராகவே போட்டியிடுகிறீர்களா? என்று ஜே.எச். பட்டீல், சித்தராமையாவிடம் கேட்டார். சித்தராமையாவிடம் பணம் உள்ளது. அதனால் அவருக்கு ஆணவம் அதிகரித்துவிட்டது. எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் ஒருவரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. யாராக இருந்தாலும், தவறு செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கட்டும்.

பிரச்சினைக்கு தீர்வு

மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்குமாறு பிரதமர் மோடியிடம் நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு மாதத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக எடியூரப்பா கூறி இருக்கிறார். அவ்வாறு ஒரு மாதத்தில் பிரச்சினைக்கு தீர்வு கண்டால், அவருக்கு நான் நன்றி கூறுவேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story