புதுவை சாலைப்போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் வாபஸ்


புதுவை சாலைப்போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 23 Nov 2017 5:30 AM IST (Updated: 23 Nov 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சர் நாராயணசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து புதுவை அரசின் சாலைப்போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

புதுச்சேரி,

புதுவை அரசின் சாலைப்போக்குவரத்துக் கழக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும். நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலைப்போக்குவரத்து கழக பஸ்கள் இயங்காமல் பணிமனையில் முடங்கின.

நேற்று முன்தினம் 4–வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து உடனே ஒருசில பஸ்கள் இயக்கப்பட்டன. தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று சட்டசபையில் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினார்கள். அப்போது எம்.எல்.ஏ.க்கள் தனவேலு, எம்.என்.ஆர்.பாலன் ஆகியோரும் உடனிருந்தனர்.

அப்போது முதல்– அமைச்சர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர். அதில், மாதந்தோறும் சரியான முறையில் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் போடவேண்டும், வழங்கப்படாமல் உள்ள போனஸ் தொகையில் 50 சதவீதத்தை உடனடியாக வழங்கவேண்டும், பி.எப்., எல்.ஐ.சி., வங்கிக்கடன் போன்றவற்றுக்கு தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகைகளை உடனே கட்டவேண்டும், 2½ வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்றவேண்டும். 8 வருடங்களாக பணிபுரியும் 12 பெண் கண்டக்டர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், புதுவை பல்கலைக்கழகத்துக்கு இயக்கி நிறுத்தப்பட்ட பஸ்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பணி ஆணை, சம்பளம் வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளை அழைத்துப் பேசுவதாகவும், அதற்கு சில நாட்கள் அவகாசம் அளிக்குமாறும், தற்போது பணிக்கு திரும்புமாறும் கேட்டுக்கொண்டார். இதை ஏற்று ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.


Next Story