கவர்னர் மாளிகை முன் போராட முயன்ற சிங்கப்பூர் பெண்ணுடன் காதலன் திருமணம்


கவர்னர் மாளிகை முன் போராட முயன்ற சிங்கப்பூர் பெண்ணுடன் காதலன் திருமணம்
x
தினத்தந்தி 23 Nov 2017 5:00 AM IST (Updated: 23 Nov 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் மாளிகை முன் கைக்குழந்தையுடன் போராட்டம் நடத்த முயன்ற சிங்கப்பூர் பெண்ணை அவரது காதலர் திருமணம் செய்து கொண்டார்.

அரியாங்குப்பம்,

சிங்கப்பூரை சேர்ந்த தமிழ்ப்பெண் விக்னேஷ்வரி (வயது 32). நர்சிங் படித்துள்ள அவர் மலேசியாவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். மலேசியாவில் கப்பல் கம்பெனி ஒன்றில் புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்த அமர்நாத் (33) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் நெருங்கிப் பழகினர்.

இதில் விக்னேஷ்வரி கர்ப்பமானார். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதையொட்டி மலேசியாவில் இருந்து புதுவைக்கு அமர்நாத் வந்து தங்கிவிட்டார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு புதுவைக்கு வந்த விக்னேஷ்வரி அமர்நாத்துடன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தினருடன் பேசினார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். அதன்பின் விக்னேஷ்வரி சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அதன்பிறகும் அமர்நாத் கண்டுகொள்ளாத நிலையில் கைக்குழந்தையுடன் விக்னேஷ்வரி மீண்டும் புதுவை வந்தார். காதலித்து ஏமாற்றிய காதலனுடன் திருமணம் செய்து வைக்குமாறு கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்த முயன்றார். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து அங்கு இருந்த போலீசார் அவரை அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவிக்குமாறு கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அதன்படி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசில் விக்னேஷ்வரி புகார் தெரிவித்தார். இதையடுத்து அமர்நாத்தை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் விக்னேஷ்வரியை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார்.

இதனைதொடர்ந்து நேற்று காலை வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீரம்மன் கோவிலில் உறவினர்கள், போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் விக்னேஷ்வரி கழுத்தில் அமர்நாத் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து மணமக்கள் தங்கள் குழந்தையுடன் கோவிலை சுற்றி வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். அங்கு திரண்டிருந்த மக்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story