குண்டு வெடிப்பில் காயமடைந்த ரவுடி கார்த்தியின் கூட்டாளிகள் 3 பேர் கைது
குண்டு வெடிப்பில் காயமடைந்த ரவுடி கார்த்தியின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வானூர்,
புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளத்தை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்தி என்கிற எலி கார்த்தி (வயது 27), கடந்த 14–ந் தேதி தனது மனைவி அருணா மற்றும் 3 மாத பெண் குழந்தையுடன் விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பில் வாடகை வீட்டில் குடியேறினார்.
மறுநாள் (15–ந் தேதி) வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் கார்த்தியின் இரண்டு கைகளும் சிதைந்து போனது. ஆபத்தான நிலையில் அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகிறார்.
கார்த்தி நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது குண்டு வெடித்து காயமடைந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் குண்டுகளை செயல் இழக்க செய்தபோது குண்டு வெடித்தது போலீஸ் விசாரணையில் பின்னர் தெரியவந்தது. இது தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார்த்தி வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருக்க அவரது மனைவி அருணா உடந்தையாக இருந்ததாக அவரை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
புதுவை குருசுக்குப்பத்தை சேர்ந்த பிரபல ரவுடி டிராக் சிவா கூட்டாளியாகத்தான் எலி கார்த்தி செயல்பட்டு வந்தார். எனவே இந்த வெடிகுண்டுகளை டிராக் சிவாவும், அவரது கூட்டாளிகளும் கார்த்தியிடம் கொடுதது பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடி வந்தனர். இதில் குருசுக்குப்பத்தை சேர்ந்த விக்கி என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சின்னையாபுரம், குருசுக்குப்பம் பகுதிகளை சேர்ந்த கார்த்தி (30), பிரபு (28), மணிகண்டன் (30) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து, வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கடலூர் சிறையில் அடைத்தனர்.