சென்னையில் சினிமா உதவி இயக்குனரை கடத்திய 2 பேர் கைது


சென்னையில் சினிமா உதவி இயக்குனரை கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2017 5:30 AM IST (Updated: 23 Nov 2017 3:59 AM IST)
t-max-icont-min-icon

குறும்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ரூ.40 ஆயிரம் மோசடி செய்த சினிமா உதவி இயக்குனர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு,

சென்னை வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன்(வயது 28). இவர், சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். தற்போது, “மெரினா எனும் கடற்கரைவாசலில்” என்ற பெயரில் குறும்படம் தயாரித்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் மணிகண்டன் வெளியே சென்று இருந்தார். மாலையில் மணிகண்டனின் மனைவி துர்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட 2 மர்மநபர்கள், “மணிகண்டனை கடத்தி வைத்து உள்ளோம். எங்களுக்கு தரவேண்டிய ரூ.40 ஆயிரத்தை உடனடியாக தரவில்லை என்றால் மணிகண்டனை கொலை செய்து விடுவோம்” என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து, மர்மநபர்கள் மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருப்பது தெரிந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று உதவி இயக்குனர் மணிகண்டனை பத்திரமாக மீட்டனர்.

அவரை கடத்தியதாக வேலூர் மாவட்டம் கம்மாவன்பேட்டையை சேர்ந்த அருண்குமார்(26), சென்னை சைதாப்பேட்டை ஆர்.கே.மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ஜீவா(27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில், கடத்தப்பட்ட மணிகண்டன் கைதான ஜீவா, அருண்குமார் இருவரிடமும் குறும்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ரூ.40 ஆயிரம் வாங்கி உள்ளார். ஆனால் பேசியபடி இருவரையும் குறும்படத்தில் நடிக்க வைக்காமலும், பணத்தை திரும்பத் தராமலும் ஏமாற்றியதாக தெரிகிறது.

இதனால் அருண்குமாரும், ஜீவாவும் சேர்ந்து உதவி இயக்குனர் மணிகண்டனை கடத்தியது தெரியவந்தது. கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story