மலட்டாறு கிளை வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள்


மலட்டாறு கிளை வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள்
x
தினத்தந்தி 23 Nov 2017 2:00 PM IST (Updated: 23 Nov 2017 12:53 PM IST)
t-max-icont-min-icon

பையூர் ஏரிக்கு செல்லும் மலட்டாறு கிளை வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள் பணிகளை சரி செய்து வருகின்றனர்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சி.மெய்யூர் மலட்டாற்றில் இருந்து பையூர் ஏரிக்கு கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மொத்தம் 7 கிலோ மீட்டர் தூரமும், 20 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீர் மூலம் பையூர், பையூர்மேடு, பை.சேத்தூர், மாரங்கியூர், மேட்டுகாலனி, பள்ளகாலனி ஆகிய கிராமங்களில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஆனால் இந்த மலட்டாறு கிளை வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இந்த வாய்க்காலை தூர்வாரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மேற்கண்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் நிலம் வறண்டு கிடந்தது.

தற்போது தென்பெண்ணையாற்றில் இருந்து பல்வேறு கிளை வாய்க்கால்கள் மூலம் ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பையூர் ஏரிக்கு தண்ணீர் வரும் மலட்டாறு வாய்க்கால் தூர்வாரப்படாததால் தண்ணீர் வரவில்லை. எனவே மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவிலேயே மலட்டாறு வாய்க்காலை தூர்வார முடிவு செய்தனர். அதன்படி சி.மெய்யூர் மலட்டாற்றில் இருந்து பையூர் ஏரி வரை செல்லும் வாய்க்காலை தூர்வாரும் பணியை நேற்று விவசாயிகள் தொடங்கினர்.

இவர்கள் தங்களது சொந்த செலவிலேயே 5 பொக்லைன் எந்திரங்களை வரவழைத்து வாய்க்காலில் உள்ள முட்புதர்கள், செடிகள், மண்மேடு, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி வருகின்றனர். மீதமுள்ள இடங்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story