இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் அ.தி.மு.க. பலவீனமாகத்தான் உள்ளது திருநாவுக்கரசர் பேட்டி


இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் அ.தி.மு.க. பலவீனமாகத்தான் உள்ளது திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 24 Nov 2017 4:45 AM IST (Updated: 23 Nov 2017 10:46 PM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் அ.தி.மு.க. பலவீனமாகத்தான் உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறினார்.

தென்காசி,

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நெல்லை மாவட்டம் குற்றாலத்திற்கு நேற்று வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது. இது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. இரண்டு, மூன்று அணிகளாக பிரிந்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. அ.தி.மு.க. கட்சி உடைந்ததற்கும், மீண்டும் இணைந்ததற்கும் மத்திய பாரதீய ஜனதா அரசு தான் காரணம். இரு அணிகள் இணைந்தாலும், அவர்களின் மனங்கள் இன்னும் இணையவில்லை. இதைத்தான் மைத்ரேயன் எம்.பி.யும் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தது. இவ்வாறு பிரிந்த நேரத்தில் ஜானகி அணியிடம் 100 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஜெயலலிதா அணியில் 33 எம்.எல்.ஏ.க்கள் தான் இருந்தார்கள். ஆனாலும் சின்னம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. சின்னம் முடக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு இருந்ததாலும், அவருடைய தீவிர முயற்சியாலும் மீண்டும் இரட்டை இலை சின்னத்தை பெற்றார்.

இப்போது, பாரதீய ஜனதா அரசு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கையில் வைத்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு வாங்கினார்கள். துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஓட்டு வாங்கினார். வரும் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி சேர்வதற்காகத்தான் இரட்டை இலை சின்னத்தை அவர்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு கிடைத்தாலும் அ.தி.மு.க. பலவீனமாகத்தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story