கடலூரில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்


கடலூரில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2017 4:15 AM IST (Updated: 24 Nov 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கான மணல் குவாரிகள் மூடப்பட்டு உள்ளதால் தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். இதனால் கடலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பி.கருப்பையன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட இணை செயலாளர் சுப்புராயன், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், பரணி, விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோஷம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், மணல் குவாரி மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை சித்தரிக்கும் வகையில், தங்களது உடலில் பட்டை நாமம் போட்டு, கைகளில் மண்சட்டி ஏந்தி தரையில் அமர்ந்து இருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைத்து கொடுக்காத பொதுப்பணித்துறையை கண்டித்தும், மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்வதை கண்டித்தும் கோஷங்கள் போட்டனர். 

Next Story