அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பினர் மீதான அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு


அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பினர் மீதான அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 24 Nov 2017 3:45 AM IST (Updated: 24 Nov 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பினர் மீதான அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

மதுரை,

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பினர் கடந்த செப்டம்பர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வக்கீல் சேகரன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து கடந்த செப்டம்பர் 7-ந்தேதி உத்தரவிட்டது.

ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தை தொடர்ந்த அரசு ஊழியர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி சேகரன் சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது செப்டம்பர் 21-ந்தேதி தமிழக தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன், அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மோசஸ், தாஸ் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

பின்னர் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்யவும், அக்டோபர் 13-ந்தேதிக்குள் அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டது.

அப்போது இந்த வழக்கை இதே அமர்வு தான் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பினர் தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை தமிழக அரசு வழங்கியது. இந்த வழக்கை அதே அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்க மறுத்தார். இதனால் அந்த அமர்வில் இருந்த நீதிபதிகளில் ஒருவரான ஜி.ஆர்.சுவாமிநாதனைக் கொண்ட அமர்வில் வழக்கை பட்டியலிட உத்தரவிடப்பட்டது.

அதன்படி அந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு ஊழியர் கூட்டமைப்பினர் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் இன்றைய தினம் (நேற்று) அவர் இந்த வழக்கில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் கால அவகாசம் தர வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இதையேற்ற நீதிபதிகள் இந்த வழக்கை டிசம்பர் 8-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story