மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 11:00 PM GMT (Updated: 23 Nov 2017 7:52 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

ஊராட்சி செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக காலையில் அலுவலகத்துக்கு வந்த அவர்கள், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, பணிகளை செய்யாமல் புறக்கணித்தனர். பின்னர் அலுவலகத்தில் ஓரிடத்தில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர். இதனால் ஊரக வளர்ச்சித்துறையில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

அதன்படி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலவலகத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்டக்கிளை நிர்வாகி நாகராஜ் வரவேற்றார். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் வட்டக்கிளை தலைவர் ராஜ்மோகன், செயலாளர் சின்னராஜா உள்பட ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சாணார்பட்டி ஒன்றியத்திலும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இதில் வட்டக்கிளை தலைவர் தட்சிணாமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையாளர் குருவானந்தம், செயலாளர் சூரியகுமார் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய அலுவலங்களில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story