பெங்களூருவில் தனியார் பள்ளியில் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்து 2 மாணவிகள் படுகாயம்


பெங்களூருவில் தனியார் பள்ளியில் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்து 2 மாணவிகள் படுகாயம்
x
தினத்தந்தி 24 Nov 2017 2:44 AM IST (Updated: 24 Nov 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தனியார் பள்ளியின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் 2 மாணவிகள் படுகாயம் அடைந்தார்கள்.

பெங்களூரு,

பெங்களூருவில் தனியார் பள்ளியின் ஜன்னல் கண்ணாடி உடைந்து விழுந்ததில் 2 மாணவிகள் படுகாயம் அடைந்தார்கள். பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 மாணவிகள் படுகாயம்

பெங்களூரு கல்யாண்நகரில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளி முன்னாள் எம்.எல்.ஏ.வான சிவராமேகவுடாவுக்கு சொந்தமானதாகும். நேற்று முன்தினம் மாலையில் பள்ளியின் வளாகத்தில் நின்று மாணவ, மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது பள்ளி கட்டிடத்தின் 3–வது தளத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடி திடீரென்று உடைந்து, விளையாடிக் கொண்டிருந்த 2 மாணவிகள் மீது விழுந்தது. கண்ணாடி விழுந்ததில் அந்த 2 மாணவிகளும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் 2 பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த மாணவிகளின் பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்களது பிள்ளைகளை பார்த்து கதறி அழுதனர்.

பெற்றோர் போராட்டம்

இந்த நிலையில், கண்ணாடி உடைந்து விழுந்து 2 மாணவிகள் படுகாயம் அடைந்ததால் நேற்று காலையில் தனியார் பள்ளிக்கு, அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், பள்ளியை முற்றுகையிட்டார்கள். மேலும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பெற்றோர் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், ஆனால் கட்டணம் மட்டும் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு கூறினார்கள். உடனே போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது படுகாயம் அடைந்த 2 மாணவிகளுக்கு ஆகும் சிகிச்சை செலவை பள்ளி நிர்வாகம் ஏற்கும் என்றும், பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை விடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story