நெல்லை– தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை மரங்கள்– மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன


நெல்லை– தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை மரங்கள்– மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன
x
தினத்தந்தி 1 Dec 2017 2:30 AM IST (Updated: 30 Nov 2017 6:24 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் மழையுடன் வீசிய சூறைக்காற்றில் பெரும்பாலான பகுதிகளில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் மழையுடன் வீசிய சூறைக்காற்றில் பெரும்பாலான பகுதிகளில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

வட கிழக்கு பருவமழை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரலாக விழ தொடங்கிய மழை தொடர்ந்து சூறைக்காற்றுடன் கனமழையாக கொட்டி தீர்த்தது. கனமழை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கி விடந்தனர்.

நெல்லை அடுத்த தாழையூத்து அருகே உள்ள சாலையில் 2 மரங்கள் வேராடு சாய்ந்தன. அதேபோல் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் முன்பு உள்ள மரம், என்.ஜி.ஓ.காலனி, மகராஜநகர், குருத்துடையார்புரம், மேல நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களை அகற்றினர்.

வாழைகள் சேதம்

சூறைகாற்றில் நெல்லை டவுன், பேட்டை, மேலநத்தம் அம்பேத்கர் காலனி மற்றும் விளாகம் பகுதியிலும் பயிரிட்டு இருந்த வாழைகள் சாய்ந்தன. நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை சிவன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் மேற்பகுதி காங்கிரீட் சுவர் கனமழையால் இடிந்து விழுந்தது. அதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 கார்கள் சேதமடைந்தன.

நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியது. அந்தந்த பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் சென்று எந்திரங்கள் மூலம் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்றினர்.

செங்கோட்டை

நெல்லை மாவட்டம் புளியரை அருகே தமிழக– கேரள எல்லையில் கோட்டை வாசல் ரோட்டில் நின்ற 2 மரங்கள் பலத்த காற்றால் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதில் ஒரு மரம் அந்த பகுதியில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதம் அடைந்தன. மின்ஒயர்களும் அறுந்து விழுந்தன. இதனால் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. புளியரை மின் ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலையில் கிடந்த 2 மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் தமிழக– கேரளா இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல் கேரள மாநிலம் ஆரியங்காவு சர்ச் கீழ்புறம் மெயின் ரோட்டில் இருந்த ஒரு ஈட்டி மரம் சாய்ந்து ஆரியங்காவு– தென்மலை ரோட்டில் விழுந்தது. தகவல் அறிந்த புனலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்காசி– அம்பை

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி அருகில் பழமையான மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் நின்ற இரும்பு மின்கம்பம் முற்றிலும் வளைந்து சேதம் அடைந்தது. இதனால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.

நெல்லையில் இருந்து மாஞ்சோலைக்கு அதிகாலை 3 மணி அளவில் அரசு பஸ் ஒன்று இயக்கப்படும். இந்த பஸ், மழையால் நேற்று காலதாமதமாக காலை 10 மணி அளவில் இயக்கப்பட்டது. மேலும் மாஞ்சோலையில் இருந்து காலை 8 மணி அளவில் அம்பைக்கு இயக்கப்படும் பஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மாஞ்சோலைக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அம்பையில் தாமிரபரணி ஆற்றுக்கு செல்லும் பாதையில் பழமையான மருதமரம் சாய்ந்து விழுந்தது.

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. போலீஸ் நிலையம் அருகில் இசக்கியம்மன் கோவில் முன்பாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது மரம் முறிந்து விழுந்தது. அங்குள்ள மின்கம்பத்தில் ஒயர்களும் அறுந்து விழுந்தன. இதனால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.

கடையம்– பாவூர்சத்திரம்

நெல்லை– தென்காசி மெயின் ரோட்டில் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டை அடுத்த குருசாமிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் நின்று ஒரு மரம் வேரோடு சாய்ந்து நடு ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடையம்– அம்பை மெயின்ரோட்டில் ஆழ்வார்குறிச்சியில் சாலையோரம் நின்ற 2 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இந்த மழையால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக 74 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

இந்த காற்று மற்றும் மழை காரணமாக தூத்துக்குடி, திருச்செந்தூர் உடன்குடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 60 மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

37 மரங்கள்

தூத்துக்குடி சத்யாநகர் பகுதியில் உள்ள மரம் காற்றின் வேகத்தில் சரிந்து அருகில் இருந்த கணேசன், ரூபி ஆகியோருக்கு சொந்தமான 3 வீடுகள் மீது விழுந்தது. இதனால் வீடுகள் சேதம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை அப்புறப்படுதுத்தினர். இதே போன்று தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, புதுக்கோட்டை சிறுபாடு ரோடு ஆகிய இடங்களிலும் மரங்கள் சரிந்தன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. 37 மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. தூத்துக்குடியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின.

திருச்செந்தூர் பகுதியில்...

திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. நேற்று பகல் முழுவதும் மின்இணைப்புகள் வழங்கப்படவில்லை. சேதம் அடைந்த மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பங்களை அமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

குலசேகரன்பட்டினம் ஹசானியா பள்ளிக்கூடம், காவலர் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்தன. தீதத்தாபுரத்தில் தெருவில் நின்ற மின்கம்பம் சரிந்து விழுந்தது. மெஞ்ஞானபுரம் அருகே மானாடு வெள்ளாளன்விளை ரோடு சந்திப்பு பகுதியில் பனைமரம் சரிந்து, அருகில் உள்ள மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் மின்கம்பம் முறிந்து விழுந்ததால், அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்கம்பங்கள் சரிந்தன

திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் உள்ள மின்கம்பம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள மின்கம்பம் சரிந்து விழுந்தன. தெப்பக்குளம் அருகில் நின்ற மரங்கள் சரிந்து விழுந்ததால், சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்தூர் அருகே கீரணூரில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. தண்ணீர்பந்தல் பகுதியில் பனை ஓலைகள் மின்கம்பிகளில் விழுந்ததால் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. ஆத்தூர், மேலஆத்தூர், சேர்ந்தபூமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான வாழைகளும் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன.

பல்வேறு இடங்களிலும் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்ததால், நீண்ட நேரமாக மின்இணைப்புகள் வழங்கப்படவில்லை. சாலையில் விழுந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.


Next Story