சமூக வலைதளங்களில் சுனாமி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை கலெக்டர் வெங்கடேஷ் எச்சரிக்கை


சமூக வலைதளங்களில் சுனாமி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை கலெக்டர் வெங்கடேஷ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Dec 2017 2:15 AM IST (Updated: 30 Nov 2017 8:01 PM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளங்களில் சுனாமி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

சமூக வலைதளங்களில் சுனாமி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(அதாவது நேற்று) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மொத்தம் 729.6 மில்லி மீட்டரும், சராசரியாக 38.4 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 91 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 77.2 மில்லி மீட்டரும், மணியாச்சியில் 69 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 66 மில்லி மீட்டரும், திருச்செந்தூரில் 59 மில்லி மீட்டரும், கடம்பூரில் 57 மில்லி மீட்டரும், கயத்தாறில் 55 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளது.

வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என்று 36 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் 13 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளை கண்காணித்து நிவாரணப்பணிகள் மேற்கொள்ள முக்கிய துறை அலுவலர்களை கொண்ட 13 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. 9 தாலுகா அளவிலான குழுக்களும், மாநகராட்சி பகுதிகள் மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு 6 நகரும் குழுக்களும், பஞ்சாயத்து யூனியன் பகுதிகளுக்கு 29 நகரும் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

154 நிவாரண முகாம்கள்

வெள்ள மீட்பு பணிக்காக பயிற்சி பெற்ற 5 போலீஸ் குழுக்கள் தயார்நிலையில் உள்ளனர். வெள்ளம் மற்றும் காற்றினால் விழும் மரங்களை உடனடியாக அகற்ற மின் மரஅறுவை எந்திரங்கள் மற்றும் தேவையான பணியாட்கள் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள மீட்பு பணிக்கு தேவையான படகுகள், மீட்பு உபகரணங்கள், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பாதிப்புக்கு உள்ளாகும் பொதுமக்களை தங்க வைக்க 154 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன. மேலும் நிவாரண முகாம்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உணவு மற்றும் இதர தேவையான பொருட்கள் வழங்க தயார்நிலையில் உள்ளனர். 59 நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண் 0461–1077–ல் தகவல் தெரிவிக்கலாம். 9486454714 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.

நடவடிக்கை

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தொடர்பான விவரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக வலைதளங்களில் சிலரால் பரப்பப்படும் சுனாமி வதந்திகளை நம்பவேண்டாம். வதந்திகளை பரப்புகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Next Story